மீட்டிங்கில் எடப்பாடியின் கேள்விக்கு கிடைத்த பதில்.. ‘அப்பீல்’ - உடனே கதவை தட்டிய ஈபிஎஸ் டீம்!
சென்னை : சட்ட வல்லுநர்கள் உடனான ஆலோசனையின்படி, அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளது.
Recommended Video
சட்ட வல்லுனர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், பொதுக்குழு கூட்டம் செல்லாது, அ.தி.மு.கவில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், "ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது, அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் செல்லாதவை. ஜூன் 23ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்" என உத்தரவிட்டது.

எடப்பாடிக்கு பாதகம்
மேலும், ஜூன் 23க்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறுவதற்கு எந்த விதமான அடிப்படையும் இல்லை, அது கற்பனையானது. கட்சி விதிகளை மீறி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூடி மறைக்கும் வகையில் அந்த வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இரட்டை தலைமைக்கு பதிலாக ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததற்கு எவ்வித புள்ளிவிவர அடிப்படையும் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது ஈபிஎஸ் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆலோசனை
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். மூத்த நிர்வாகிகள், சட்ட வல்லுநர்களோடு தொடர்ச்சியான ஆலோசனையில் ஈடுபட்டார் ஈபிஎஸ். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், பொன்னையன், ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சம்பத், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஈபிஎஸ் வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் பங்கேற்றனர்.

தீர்ப்பை முழுமையாக படித்து
மேலும், மூத்த வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்களுடனும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. நேற்று மாலை உயர் நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் வெளியிடப்பட்ட நிலையில், அதனை முழுமையாக படித்து, சட்ட வல்லுநர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். தீர்ப்பில், தங்களுக்கு எதிராக உள்ள பாயிண்டுகள் குறித்து ஈபிஎஸ் உடன் அவர்கள் ஆலோசித்துள்ளனர்.

என்னென்ன சான்ஸ்?
இந்த தீர்ப்பின் அடிப்படையில் நமக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றியும் சட்ட வல்லுநர்களின் பாயிண்டுகளை கேட்டறிந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. பொதுக்குழுவைக் கூட்டி ஆதரவை நிரூபிக்கலாம் என்ற அம்சம் தங்களுக்கு சாதகமாக இருந்தாலும், ஓபிஎஸ் தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும், நீதிமன்றத்தையும் அவர் நாடலாம் என்பதால், மேல்முறையீடு செய்வது பலன் தருமா என்றும் கேட்டுள்ளார் ஈபிஎஸ். அதற்கு மூத்த சட்ட வல்லுநர்கள், இப்போதைக்கு அதை நோக்கிச் செல்வோம் எனக் கூறியதாகத் தெரிகிறது.

மேல்முறையீடு செய்ய திட்டம்
இதையடுத்து, தீர்ப்பின் சில அம்சங்கள் தவறாகச் சுட்டிக்காட்டப்பட்டு இருப்பதாக எழுந்த கருத்தின் அடிப்படையில், ஈபிஎஸ் தரப்பு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்றும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்கள், இன்றே மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ஓபிஸ் தரப்பை நெருக்கடிக்குள் தள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமை விசாரணை
தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் விஜயநாரயணன் ஆஜராகி, மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இதையேற்ற நீதிபதிகள் திங்கட்கிழமை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications