கோயம்பேடு நிலை தானா கிளாம்பாக்கத்திற்கும்? 20 வருடங்களில் இதையெல்லாம் கவனித்தீர்களா? ஆச்சர்யமான உண்மை
சென்னை: கோயம்பேட்டில் தான் பஸ் ஸ்டாண்ட் இத்தனை காலமாக இருந்தது.. திநகர் போலவோ, அண்ணா நகர் போலவோ, மாறவில்லையே.. ஏன் அங்கு எந்த பெரிய வணிக நிறுவனங்களும் அமையவில்லை என்று தெரியுமா? நாளை கிளாம்பாக்கத்திற்கும் இதே கதிதானா.. ஏன் பேருந்து நிலையங்களை ஒட்டிய பகுதிகளில் பெரிய நிறுவனங்கள் சென்னையில் வர மறுக்கின்றன என்பதை பார்ப்போம்.
சென்னையில் பாரீஸ் கார்னரில் இருந்த வெளியூர் பேருந்து நிலையம், கோயம்பேடுக்கு மாறி 20 வருடங்கள் ஆகிவிட்டது.. இப்போது கோயம்பேட்டிற்கு பதில் கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாறிவிட்டது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இருக்கிறது. கடந்த 20 வருடங்களில் கோயம்பேட்டில் எந்த பெரிய வணிக நிறுவனங்களும் வரவில்லை.. ஆனால் தமிழ்நாட்டில் மற்ற அனைத்து நகரங்களிலும் பேருந்து நிலையத்தை ஒட்டித்தான் பெரிய வணிக நிறுவனங்கள் படை எடுப்பார்கள்.. ஆனால் சென்னையில் அப்படிநடக்ககவில்லை...

சென்னையில் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் எல்லாமே புறநகர் ரயில் நிலையமும், பேருந்து நிலையமும் ஒன்றாக உள்ள பகுதிகளில் தான் பெரும்பாலும் அமைந்துள்ளன. உதாரணத்திற்கு தி நகர். சென்னையின் மிகப்பெரிய வணிக மையம் என்பது சந்தேகமே வேண்டாம்.. அது தி நகர் தான். அதற்கு காரணம் சென்னையின் மையப்பகுதியில் திநகர் இருப்பது தான். அதுமட்டுமின்றி, சென்னை திநகரில் உள்ள மாம்பலம் ரயில் நிலையம். அதை ஒட்டி அமைந்த வணிக நிறுவனங்களின் வளர்ச்சி தான்..
அதேநேரம் தி நகருக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வளர்ச்சியை குரோம்பேட்டையில் ஏற்பட்டுள்ளது.. குரோம்பேட்டை ரயில் நிலையமும் பேருந்து நிலையமும் ஒன்றாக இருந்த காரணத்தால் அந்த பகுதியும் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேட்டில் வணிக நிறுவனங்கள வராமல் போக முக்கிய காரணம்.. அங்கு நிலவிய மோசமான போக்குவரத்து நெரிசல் தான்.. ஆனால் கோயம்பேட்டிற்கு பதில் வடபழனியிலும், அண்ணா நகரிலும் வளர்ச்சி அடைந்தன.
கோயம்பேட்டில் வணிக நிறுவனங்கள் வர முடியாத அளவிற்கு வாகன நெருக்கம் இருந்தது. ஒரு வணிக நிறுவனம் அமைந்தால் கண்டிப்பாக பல்லாயிரம் பேர் வருவார்கள். அந்த போக்குவரத்து நெரிசல் கூடுதலாக வரும். ஏற்கனவே ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகளின் நிறுத்தங்களுக்கே கோயம்பேட்டை சுற்றி உள்ள இடங்கள் போதாமல் இருந்தன. இதுதவிர மார்க்கெட்டும் இருக்கும் காரணத்தால், வணிக நிறுவனங்கள் கோயம்பேட்டை சுத்தமாக விரும்பவில்லை.
அதுமட்டுமின்றி கோயம்பேட்டிற்கு வரும் மக்கள் பைகளை, சுமைகளை தூக்கி கொண்டு சொந்த ஊருக்கு சென்றார்கள். அதுபோல் கோயம்பேட்டிற்கு திரும்பும் போதும், பைகளை, சுமைகளை தூக்கி கொண்டு குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வருவார்கள். அவர்களுக்கு ஷாப்பிங் சிந்தனையே தோன்றாது. இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது..
இது கோயம்பேட்டிற்கு மட்டுமல்ல., நாளை கிளாம்பாக்கத்திற்கும் கண்டிப்பாக பொருந்தும். கிளாம்பாக்கத்தை சுற்றி கண்டிப்பாக பெரிய வணிக நிறுவனங்கள் கால் வைக்க யோசிக்கும். அதேநேரம் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, வண்டலூர் கேளம்பாக்கம் சாலைகளில் அதிக வணிக நிறுவனங்கள் படை எடுக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பொத்தேரி மிகப்பெரிய வணிக தளமாக சென்னையில் உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது..












Click it and Unblock the Notifications