ஆமா.. ராஜேந்திர பாலாஜி இன்னும் போலீசில் சிக்கவில்லையே எப்படி? ஓஹோ.. கதை அப்படி போகுதா!
சென்னை: பண மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்ட போதிலும், அவரை தமிழக போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. இது பல கேள்விகளை அரசியல் களத்தில் எழுப்புகிறது.
முந்தைய அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, ராஜேந்திர பாலாஜி ரூ 3 கோடி வரை மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அவரை கைது செய்யத் தனிப்படைக்கு மேல் தனிப்படை அமைத்துள்ள போதிலும், தமிழ்நாடு போலீசார் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

சைபர் க்ரைம் போலீஸ்
பண மோசடி குற்றச்சாட்டில் மாஜி மந்திரி ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய தமிழக போலீஸ் வலை வீசித் தேடி வருகிறது. தமிழக காவல் துறைக்கு டிமிக்கி கொடுத்தபடி பதுங்கியிருக்கிறார் அவர். இந்த நிலையில், வெளிநாடுகளுக்குத் தப்பித்து ஓடிவிடக்கூடாது என அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், இன்றைக்கிருக்கும் டெக்னாலஜி வளர்ச்சியில் ஒருவர் எங்கிருக்கிறார் என்பதை சைபர் க்ரைம் போலீசாரால் எளிதாக கண்டுபிடித்து விட முடியும்.

உதவும் பழைய தோஸ்துகள்?
சோர்ஸ்களும் தொடர்புகளும் இல்லாத சாமானியர்களையே 24 மணி நேரத்தில் பிடித்து விடுகிற போலீஸ், நிறையத் தொடர்புகளை வைத்திருக்கும் ராஜேந்திர பாலாஜியை ஏன் பிடிக்க முடியவில்லை? என்கிற கேள்விகள் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்கள் மத்தியில் இப்போது பேசு பொருளாகி உள்ளது. ராஜேந்திர பாலாஜிக்கு போலீசிலுள்ள பழைய தோஸ்துகள் யாராவது உதவுகின்றனரா? என்ற சந்தேக கேள்விகளும் தமிழக அரசியல் வட்டாரங்கள் எதிரொலிக்கிறது.

கடுப்பான அதிமுக தலைமை
இதற்கிடையே, ராஜேந்திர பாலாஜி விவகாரத்தைக் கவனிக்கும் இபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே, தங்களிடம் பேசும் தென்மாவட்ட மூத்த நிர்வாகிகளிடம், ஏன்பா அவர் ஓடி ஒளிஞ்சிக்கிட்டு இருக்காரு. அரசியல்வாதின்னா கைதுக்குப் பயப்படலாமா? கட்சியை அசிங்கப்படுத்த வேண்டாம்னு சொல்லுங்கப்பா என்று கமெண்ட் பண்ணியிருக்கிறார்கள்.

முன் ஜாமீன் மனு
விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அடிப்படையிலேயே அவரை கைது செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது போலீஸ்! இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இருப்பினும், முனஅ ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

600 செல்போன்கள்
செல்போன் சிக்னல் மூலம் ராஜேந்திர பாலாஜி இருக்கும் இடத்தை கண்டறிந்து கைது செய்யும் முயற்சியிலும் தமிழ்நாடு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவருடன் தொடர்பில் இருந்த 600 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 600 பேரின் மொபைல் எண்களையும் சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருவதால், விரைவில் ராஜேந்திர பாலாஜி இருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்தேகம்
அதேபோல அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் மொபைல் எண்களையும் நோட்டமிடத் தொடங்கியுள்ளது தமிழ்நாடு போலீஸ்! இருப்பினும், இதையெல்லாம் தாண்டியும் அவரை தமிழ்நாடு போலீசார் நெருங்க முடியாமல் இருப்பதே பல்வேறு சந்தேகங்களையும் புது புது யூகங்களையும் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications