"நம்மை தாக்க போகும் முதல் சக்கரம்".. தமிழ்நாடு வானிலையில் ஏற்படும் மாற்றம்.. வெதர்மேன் தந்த வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி இருக்கும், அடுத்த ஒரு வாரத்திற்கு பின் வானிலையில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த மாத தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்து உள்ளது. இந்த தாழ்வு பகுதி தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் தற்போது வடக்கு மாவட்டங்களில் இருந்து மழை மேகங்கள் தென் மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. இதனால் சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் இன்று மழை குறைவாக இருக்கும்.
டெல்டா மாவட்டங்களிலும் மழை குறையும். பெரும்பாலும் இன்று மாலையில் இருந்து வறண்ட வானிலை காணப்பட வாய்ப்புகள் உள்ளன. தென் மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.

வானிலை
இந்த நிலையில் தமிழ்நாடு வானிலை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொஞ்சம் மழை பெய்யும். அதன்பின் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே இருக்கும். முக்கியமாக உங்கள் வாகனங்களில் பனியை கூட நீங்கள் பார்க்க முடியும்.

மாணவர்கள்
பள்ளி செல்லும் மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம். அதற்கு வாய்ப்பு குறைவுதான். குன்றத்தூர் தவிர மற்ற பகுதியில் கொஞ்சம் கஷ்டம்தான். தெற்கு தமிழ்நாட்டில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் அருகாமை மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும். கொங்கு மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும்.

எப்போது தொடங்கும்
அடுத்த மழை 20ம் தேதி வாக்கில் தொடங்கும். ஒன்று இரண்டு நாட்கள் முன் பின் இருக்கலாம். காற்றழுத்த தாழ்வு பகுதி அங்கே உருவாகலாம். அது வலிமை குறைந்த சூறாவளியாகவோ அல்லது தாழ்வு பகுதியாகவோ மாறலாம். இந்த சீசனில் நம்மை தாக்க போகும் முதல் சக்கரம் இது என்றும் கூறலாம். ஆனால் அதை பற்றி முழுமையான அப்டேட்களை தெரிந்து கொள்ள இன்னும் நாட்கள் இருக்கின்றன, என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில் குறிப்பிட்டு உள்ளார்.

எப்படி இருக்கும்?
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று மழை பெய்யும். இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் வாய்ப்புகள் உள்ளன. இன்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அடுத்த வாரம் உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுமா என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications