மூடப்படாத பள்ளம்.. நிலைத்தடுமாறிய பைக்...அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி மென் பொறியாளர் பலி
சென்னை: சென்னை கிண்டியை அடுத்த சின்னமலை அருகே அரசு மாநகரப் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஐ டி ஊழியர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நங்கநல்லூரைச் சேர்ந்தவர் முகமது யூனுஸ். இவர் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்தார். இவர் பொதுவாகவே தனது இரு சக்கர வாகனத்தில்தான் அலுவலகத்திற்கு செல்வது வழக்கம்.
அதே போல் இன்றும் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டார். ஏற்கெனவே மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்கினர்.

யூனுஸ்
இந்த நிலையில் சின்னமலை அருகே யூனுஸ் சென்று கொண்டிருந்த போது ஒரு இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் அது பள்ளம் என யூனுஸுக்கு தெரியாமல் அதன் மீது வாகனத்தை இயக்கினார். அப்போது பள்ளத்தால் வாகனம் தூக்கி போட்டது. உடனே பிரேக் பிடித்த யூனுஸ் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

வடபழனி
அப்போது அப்போது சென்னை பெசன்ட் நகரில் இருந்து வடபழனி நோக்கி சின்னமலை வழியாக 5E என்ற பேருந்து சென்று கொண்டிருந்தது. அவர் விழுந்ததும் பேருந்துக்கு அடியில் சிக்கினார். உடனே அங்கிருந்த வாகன ஓட்டிகள் பதறியடித்து கொண்டு யூனுஸை மீட்க முயன்றனர். ஆனால் அவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

புலனாய்வு காவல் துறை
விபத்து குறித்து தகவலறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு காவல்துறை அரசு மாநகரப் பேருந்து ஓட்டுநர் தேவராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. சம்பவ இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதையடுத்து விபத்து நடந்த இடத்தில் இருந்தவர்களிடம் போலீஸார் விசாரித்தனர்.

சாலையோர பள்ளங்கள்
யூனுஸ் தடுமாறி விழுந்ததற்கு சாலையில் இருந்த பள்ளமே காரணம் என சொல்லப்படுகிறது. இது போன்ற போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் உள்ள பள்ளங்களை மாநகராட்சியினர் மூட வேண்டும். குறைந்தபட்சம் சிமென்ட் கலவை போட்டாவது மூடியிருக்க வேண்டும். இதை மாநகராட்சி செய்திருந்தால் இன்று இந்த உயிர் அநியாயமாக போயிருக்காது. இனி மழைக்காலம் என்பதால் இனியாவது சாலைகளில், சாலையோரத்தில் உள்ள பள்ளங்களை உடனடியாக மூட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.












Click it and Unblock the Notifications