ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ தீபாவுக்கு பெண் குழந்தை பிறந்தது! மாதவன் சொன்ன குட் நியூஸ்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவருடைய கணவர் மாதவன் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனுக்கு ஜெ தீபா, ஜெ தீபக் ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது தன்னை பார்க்க விடாமல் சசிகலா தடுக்கிறார் என ஜெ தீபா மீடியா முன்பு குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதா இறந்தவுடன் அவரை போலவே இருக்கும் ஜெ தீபாவை தேடி அதிமுக நிர்வாகிகள் திரண்டனர். ஜெ தீபாவும் அவருடைய அத்தையின் பிறந்தநாளன்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார்.
தர்மயுத்தமா.. அது கர்ம யுத்தம்! 'அதை’ செய்திருந்தால் ஜெயலலிதா பிழைத்திருப்பார்! ஜெயக்குமார் பளீர்!

நிர்வாகிகள்
இந்த அமைப்பில் பலர் இணைந்தனர். இந்த அமைப்பின் மூலம் அதிமுகவை தனது அத்தையை போல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அவ்வப்போது கூண்டோடு கலைந்தனர். இதையடுத்து ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முற்பட்டார்.

வேட்புமனு
ஆனால் அவருடைய வேட்புமனுவில் தவறு இருந்ததாக கூறி அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் அவ்வப்போது தங்களது திருமண நாளையொட்டி தீபாவும் மாதவனும் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்துவர். அது போல் ஜெயலலிதாவின் வாரிசு தானும் தனது தம்பியும்தான் என போராடி, நீதிமன்றத்தில் போயஸ் தோட்ட இல்லத்திற்கான உரிமையை பெற்றார்.

குடும்ப சண்டை
கணவன் மனைவிக்குள் சண்டை, தம்பி தீபக்குடன் சண்டை, கணவர் விவாகரத்து கேட்பதாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் என தொடர்ந்து பிரச்சினையில் சிக்கித் தவித்தார் ஜெ தீபா. இதை மாதவன் மறுத்தார். தனக்கு வாழ்வு என்று ஒன்று இருந்தால் அது தீபாவுடன்தான் என்றார். மேலும் தீபாவும் இந்த சண்டை எல்லார் வீட்டிலும் நடப்பதை போன்ற கணவன்- மனைவி சண்டைதான். இது நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்றும் தெரிவித்திருந்தார்.

பெரியவர்கள் தலையீடு
பின்னர் பெரியவர்கள் தலையீட்டின் படி இருவரும் சமாதானப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் ஜெ தீபாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவருடைய கணவர் மாதவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஜெ தீபாவின் கணவர் மாதவனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறுகையில் எங்களுக்கு அக்டோபர் 31 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

பெண் குழந்தை
சென்னை வேளச்சேரியில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலம் என தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவே ஜெ தீபாவுக்கு குழந்தையாக பிறந்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள். திருமணம் ஆகி நீண்ட காலம் ஆகியும் ஜெ தீபாவுக்கு குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது பிறந்த குழந்தையால் இரு வீட்டார் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.