அப்பாவை வீடு புகுந்து பலவந்தமாக இழுத்து சென்றனர்..ஜனநாயக படுகொலை.. ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் ஆவேசம்
சென்னை : தனது தந்தையை வீடு புகுந்து போலீசார் பலவந்தமாக இழுத்துச் சென்றதாகவும் கைது பற்றி எந்த விவரத்தையும் போலீசார் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என ஜெயக்குமாரின் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயவர்த்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற வாக்குப் பதிவில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக புகார் எழுந்தது.
அப்போது அங்கு இருந்த அதிமுகவினர் திமுக தொண்டரை கடுமையாக தாக்கிய நிலையில் அங்கிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்தத் தொண்டரின் சட்டையைக் கழற்றச் சொல்லி அரை நிர்வாணம் ஆக்கியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

ஜெயக்குமார் கைது
இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கண்டனங்கள் தெரிவித்து இருந்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த தண்டையார்பேட்டை காவல்துறையினர் கலவரம் செய்தல், ஆபாசமாகப் பேசுதல், ஆயுதத்துடன் கொலை மிரட்டல் உள்ளிட்ட 10 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று இரவு 8 மணி அளவில் வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்தனர்.

அதிமுக கண்டனம்
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சென்னை ராயபுரம், பட்டினபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள், அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மகன் போராட்டம்
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் முன்பு அவரது மகனும் அதிமுக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஜெயவர்த்தன் தனது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், " தனது தந்தையை வீடு புகுந்து போலீசார் பலவந்தமாக இழுத்துச் சென்றதாகவும் கைது பற்றி எந்த விவரத்தையும் போலீசார் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனநாயக படுகொலை
மேலும், போலீசார் தன்னை தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தனர் எனவும், தனது தந்தை ஜெயக்குமார் உடல்நிலை குறித்து போலீசாரிடம் தெரிவித்தும் அவர்கள் கேட்கவில்லை எனவும், கைது செய்து அழைத்துச் செல்லும் போது போலீசார் தங்கள் வாகனத்தை பின் தொடர விடாமல் தடுத்ததாக கூறினார். தற்போது வரை ஜெயக்குமாரை எங்கு வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை எனக் கூறியுள்ள ஜெயவர்த்தன், கைது சம்பவம் முழுவதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடைபெற்று உள்ளது எனவும் இது ஒரு ஜனநாயகப் படுகொலை என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications