சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive சசிகலா அதிமுகவுக்குள் வரலாம்.. ஆனால் வந்தா ராஜாவாதான் வருவேனு சொல்ல கூடாது- கேசி பழனிசாமி

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா அதிமுகவுக்குள் வரலாம். ஆனால் தலைமை பதவியில்தான் வருவேன் என அவர் சொல்லக் கூடாது என அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் ஒன் இந்தியாவுக்கு கே சி பழனிச்சாமி அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில் சசிகலா விஷயத்தில் ஓபிஎஸ் தொண்டர்களை குழப்பக் கூடாது. தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும். மேலும் எடப்பாடி பழனிச்சாமியை போல் கட்சியை பாதிக்கும் வகையில் ஓபிஎஸ்ஸும் நடந்துக் கொள்ளவும் கூடாது. குறைந்தபட்சம் அவரது நிலைப்பாட்டை மக்களிடமும் தொண்டர்களிடமும் தெளிவுப்படுத்திவிட வேண்டும்.

இரு தலைமைகளும் இப்படி போட்டி போட்டுக் கொண்டு சண்டையிடுவதால் கட்சி பலவீனம் ஆகிறது. ஒருபக்கம் சேலம் இளங்கோவன் வீட்டில் ரெய்டு, கொடநாடு விவகாரத்தில் கனகராஜின் சகோதரர் ரமேஷ் கைது, எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் மீது ஊழல் வழக்கு... இப்படியாக எடப்பாடி பழனிச்சாமி தன் பங்கிற்கு கட்சியை பலவீனப்படுத்துகிறார்.

K.C.Palanisamy says that Sasikala may come to AIADMK

மறுபக்கம் எடப்பாடி பழனிச்சாமி ஏதாவது ஒரு வழக்கில் சிக்கி கைதானால் கட்சியை தான் ஏற்று நடத்த ஓபிஎஸ் முயற்சிக்கிறாரா என்பது தெரியவில்லை. இன்னொரு பக்கம் சசிகலா விவகாரத்தில் மாறி மாறி பேசி கட்சியை டேமேஜ் செய்கிறார். ஆக மொத்தம் இருவருமே கட்சி தலைமைக்கு தகுதியானவர்கள் இல்லை. இதைத்தான் தொண்டர்களும் நினைக்கிறார்கள்.

அதிமுகவில் சசிகலா வந்தால் சேர்க்கலாம். ஆனால் பொதுச் செயலாளர் பதவிக்குத்தான் வருவேன் என சொல்லக் கூடாது. அதிமுகவின் தலைமையை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். நான் வந்தால் பொதுச் செயலாளராகத்தான் வருவேன் என சசிகலா கோரிக்கை வைக்கக் கூடாது. சசிகலாவினுடைய அணுகுமுறையை பார்த்தால் எல்லாரும் ஒன்றிணைந்து எனது தலைமையை ஏற்க வேண்டும் என்பது போல்தான் இருக்கிறது. இது அனைவராலும் ஏற்க முடியாது. ஒன்றுபட்ட அதிமுக தேவை, தலைவர் யார் என்பதை தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அடிமட்ட தொண்டர்கள் முதல் மூத்த தலைவர்கள் வரை உள்கட்சி தேர்தலில் பங்கேற்று வாக்களித்து தலைவரை தேர்வு செய்ய வேண்டும். எனவே வந்தால் ராஜாவாதான் வருவேன்னு சசிகலா சொல்வதை ஏற்க முடியாது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் ரெய்டு நடந்த போது முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் பிரதமர் மோடியை டெல்லி சென்று பார்த்துவிட்டு வந்தனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு தேனியில் பேட்டி அளித்த ஓபிஎஸ், சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்றார். அன்று அவ்வாறு சொன்ன இவர் நேற்றைய தினம் பரிசீலனை செய்வோம் என்கிறார். தேனியில் சகிகலாவுக்கு எதிராக பேசி 3 மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் தனது நிலைப்பாட்டை ஓபிஎஸ் மாற்றியது ஏன்? தான் மீடியா வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி சொல்கிறாரா இல்லை கட்சியை உண்மையில் ஒன்றுபடுத்த வேண்டும் என்பதற்காக சொல்கிறாரா?

K.C.Palanisamy says that Sasikala may come to AIADMK

ஒரு வேளை அதிமுகவை ஒன்றுப்படுத்த நினைத்தால் அதிமுக ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ்ஸுக்கு தலைமை கழகத்தை கூட்டுவதற்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது. அவ்வாறு கூட்டும் பட்சத்தில் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து வாதிடலாம் அல்லது அவருடைய சொந்த கருத்தை முன்வைத்திருக்கலாம். குறைந்தபட்சம் பத்திரிகையாளர்களிடம் ஒன்றுபட்ட அதிமுக எனக்கு தேவை. இதற்கு எல்லா உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என ஓபிஎஸ் வேண்டுகோளையாவது வைத்திருக்கலாம்.

இதையெல்லாம் விட்டுவிட்டு அவர் மாற்றி மாற்றி பேசுவது அவரது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது. அவரது நிலைப்பாட்டை அவர் தெளிவாக அறிவிக்க வேண்டும். இப்படியெல்லாம் ஓபிஎஸ் செய்வதை பார்த்தால் கட்சிக்கு பொதுச் செயலாளராகவும் அடுத்த சட்டசபை தேர்தலில் (2026) முதல்வர் வேட்பாளராக வேண்டும் என்பதற்கான முயற்சியாகவே தெரிகிறதே ஒழிய கட்சியை ஒன்றுப்படுத்துவதற்காக அவர் பேசுவதாக தெரியவில்லை.

கவனிச்சீங்களா?.. இது குறியீடா?.. அதிரடி கிளப்பும் சசிகலா.. எடப்பாடி பழனிசாமிக்கு பெருகும் சிக்கல்?கவனிச்சீங்களா?.. இது குறியீடா?.. அதிரடி கிளப்பும் சசிகலா.. எடப்பாடி பழனிசாமிக்கு பெருகும் சிக்கல்?

எதிர்க்கட்சித் தலைவர், அரசு கொறடா பதவி உள்ளிட்டவைகளில் மேற்கு மண்டலத்தினரே ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்ற கோபம் இவருக்கு இருக்கிறது என்றால் அந்த பதவிகளை இவர் விட்டுக் கொடுத்தது ஏன்? எந்த விஷயத்திலும் இவர் உறுதியாக இல்லையே. சசிகலாவுக்கு ஆதரவாக இத்தனை விஷயம் பேசுகிறார். ஆனால் பசும்பொன்னில் சசிகலா வருவதற்காக பாதுகாப்பு கேட்டு போலீஸிடம் கடிதம் அளித்த அதிமுகவின் முத்துராமலிங்கம் உள்ளிட்ட இருவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஓபிஎஸ் கையெழுத்திட்டுள்ளார். எதற்காக அப்படி செய்தார். நான் கையெழுத்திட மாட்டேன் என சொல்லியிருக்கலாமே. எனவே சசிகலா விவகாரம் உள்பட அனைத்திலும் அவர் தனது முடிவிலும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இருக்க வேண்டுமே தவிர மாற்றி மாற்றி பேசி தொண்டர்களை குழப்பக் கூடாது.

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்த கட்டுக்கோப்பான ஒன்றுபட்ட அதிமுக தேவைப்படுகிறது. தொண்டர்களால் மட்டுமே அதிமுக தலைமை உருவாக்கப்பட வேண்டும். ஜாதிகளுக்கு அப்பாற்பட்ட அதிமுகவாக இருக்க வேண்டும். ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, தங்கமணி, வேலுமணி, கே பி முனுசாமி என ஆளாளுக்கு ஜாதி ரீதியில் அதிமுகவை கொண்டு வர பார்க்கிறார்கள். அதிலும் சசிகலா வந்தால் நான் இறந்துவிடுவேன் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி பேசுகிறார்.

K.C.Palanisamy says that Sasikala may come to AIADMK

இது முட்டாள்தனமான பேச்சு. அவருடைய ஒப்பிடுதலே தவறானது. வயதானதால் எல்லாரும் இறந்துவிடுவார்கள். இதில் என்ன புதுசு இருக்கிறது. யாரும் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ மாட்டார்கள். ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசுவதாக கே பி முனுசாமி நினைத்துக் கொண்டு முட்டாள்தனமாக பேசியுள்ளார். நகர்ப்புற தேர்தலுக்கு பிறகு நாடாளுமன்றத் தேர்தல் (2024) நடைபெறுவதற்கு முன்னர் அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும். ஒன்றுபட்ட அதிமுக உருவாக வேண்டும். அந்த ஒன்றுபட்ட அதிமுகவின் தலைமையை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கக் கூடாது. ஏன் என கேட்டீர்களானால், பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு மாற்று தாங்கள்தான் என்கிறார். இன்னொரு பக்கம் தங்களுடன் அதிமுக இருப்பதாக பாஜக சொல்கிறது.

புதுவையில் சட்டசபை தேர்தலில் முதல்முறையாக வென்ற அதிமுக தற்போது தோல்வி அடைந்துவிட்டது. புதுவையை போல தமிழகத்திலும் அதிமுக தோற்க பாஜக முயற்சிக்கிறது. இதை நாம் அனுமதிக்கக் கூடாது. மதவாதம், ஜாதியம் வேண்டாம், ஒன்றுபட்ட அதிமுக தேவை. அதிமுகவின் தலைமை தொண்டர்களால் தேர்வு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளைத்தான் என்னிடம் பேசும் தொண்டர்கள் முன் வைக்கிறார்கள்.

எனவே நகர்ப்புற தேர்தலுக்கு பிறகு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒன்றுபட்ட அதிமுக உருவாகும். இரு தலைமைகளுக்கிடையேயான போட்டியில் அதிமுக இரண்டாக பிளவுபட வாய்ப்பே கிடையாது. ஆனால் தலைமை பொறுப்பிலிருந்து ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் ஒதுக்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. பாஜக எதிர்ப்பு, ஜாதி அற்ற அதிமுக, ஊழலற்ற அதிமுக, தொண்டர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கக் கூடியதாகவே ஒரு தலைமை இருக்க வேண்டும். இதை யாருமே பின்பற்றுவதில்லை. தலைமை பொறுப்பை எனக்கு கொடுங்கள் என்கிறார் ஓபிஎஸ், வந்தா ராஜாவாதான் வருவேன் என்கிறார் சசிகலா, பிடித்து வைத்திருக்கும் நாற்காலியை நான் விடமாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

எனவே இவர்களில் யாருமே கட்சியின் நலனுக்காகவோ, தொண்டர்களின் நலனுக்காகவோ, தமிழக மக்களின் நலனுக்காகவோ பாடுபடவில்லை. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இறப்பிற்கு பிறகு அந்த பதவிக்கு ஒருவரை நியமிப்பதில் கூட இவர்களுக்குள் கருத்தொற்றுமை இல்லை. பொதுக் குழுவை கூட்டவில்லை, உள்கட்சி தேர்தல் குறித்தும் அவர்கள் பேசவில்லை. இவையெல்லாம் பொதுமக்கள் மத்தியில் அதிமுக நாளுக்கு நாள் பலவீனமடைவதையே காட்டுகிறது. இதை தனக்கு சாதமாக்கிக் கொண்டு பாஜக வளர முயற்சிக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் தோற்றாகிவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலாவது அதிமுக வெல்லும் என்ற ஒரு நம்பிக்கையை கூட தொண்டர்களுக்கு கொடுக்காமல் இருக்கிறார். இப்படியே போனால் நகர்ப்புற தேர்தலிலும் அதிமுக தோற்கும் என்றார் கே சி பழனிச்சாமி.

English summary
EX MP K.C.Palanisamy says that Sasikala may come to AIADMK, but she should not want to take lead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X