"தாமரை"க்கு சிக்கல்.. அதோடு நிறுத்திக்கணும்.. வீட்டை முற்றுகையிடுவோம்.. ஜல்லிக்கட்டு அமைப்பு அதிரடி
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு எதிராக தான் சொன்ன கருத்துக்களுக்கு கவிஞர் தாமரை மறுப்பு தெரிவிக்காவிட்டால், அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்று ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் அறிவித்துள்ளது.. கவிஞர் தாமரை தந்துள்ள விளக்கம் அவரது அறியாமையைக் காட்டுகிறது என்றும் அச்சங்கம் விமர்சித்துள்ளது.
கவிஞர் தாமரை கடந்த 17ம் தேதி, தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில், ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.. அதில், "பொங்கல் வாழ்க, மாடுபிடிக் கொடுமை வீழ்க" என்ற தலைப்பில், ஆத்திர உணர்வு குறியீட்டுடன் சில கருத்தை தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு முழுவதும் ஜன.26 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள்! விவாதிக்கலாம் வாங்க! மக்களுக்கு அழைப்பு!

குறியீடு
'ஜல்லிக்கட்டு என்னும் விளையாட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வீர விளையாட்டாக இருந்திருக்கலாம், பின்னர் அது மரபாக மாறியிருக்கலாம். பலவகை மரபுகள் குறித்த நமது சிந்தனைகள் மாறி வருகின்றன. விலங்குகளுக்கும் உணர்வு உண்டு, வாழும் ஆசை, உரிமை உண்டு. எப்போதைவிடவும் இப்போது, விலங்குரிமை குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. ஆயிரக்கணக்கானோர் கூடி மாட்டை துன்புறுத்தி வீரன் என்ற பட்டம் வாங்குவது கேவலம். ஜல்லிக்கட்டு தமிழருக்குத் தேவையில்லை, அதை வீர விளையாட்டாகக் கருதாமல் வன்கொடுமையாகக் கருதி, அதை அரசு தடை செய்ய வேண்டும்.

கேவலம்
மக்களிடம் விலங்குகளின் உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படியாக குறைத்து, காலப்போக்கில் அதை ஒழித்துவிட வேண்டும்.. ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும். அது வீர விளையாட்டு அல்ல, அது ஒரு வன்கொடுமை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வீர விளையாட்டாக இருந்திருக்கலாம், காலத்தொடர்ச்சியில் அது மரபாக மாறி விட்டிருக்கலாம். ஆனால், பலவகையான மரபுகள் குறித்து காலத்துக்குக்காலம் சிந்தனைகள் மாறி வருகின்றன என்பதை மறந்து விடலாகாது. மாட்டை சாய்த்து வீரப்பட்டம் வாங்குவது கேவலம்" என்பது முதல் பல்வேறு ஆதங்கத்தையும், வருத்தத்தையும் அதில் தெரிவித்திருந்தார்.

தாமரை
தாமரையின் இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகளும், ஆதரவுகளும் மாறி மாறி கிளம்பின.. மேலும், இந்த கருத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான விவாதங்களும் எழுந்தன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் கவிஞர் தாமரைக்கு தற்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில இளைஞரணி தலைவர் ராஜேஷ் இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு, அதில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்..

கறக்கும் பால்
'கவிஞர் தாமரை பாடல் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளட்டும். தமிழர்களின் மரபுகளை மறக்கடிக்க அவர் வேறு கூட்டத்தினரோடு சேர்ந்து சதி செய்கிறாரோ என்று தோன்றுகிறது. எது வன்முறை என்பதற்கு அவர் தந்துள்ள விளக்கம் அவரது அறியாமையை காட்டுகிறது. ஜல்லிக்கட்டில் காளையை எவ்வாறு அடக்க வேண்டும் என்பதற்கு விதிமுறைகள் உள்ளன. அவற்றை மீறுபவர்களை தடை செய்துவிடுகிறார்கள். பால் கறக்கும்போது பசுவிடம் கேட்டுத்தான் பால் கறக்கிறோமா? தாமரை பால், தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவராக நிச்சயம் இருப்பார்.

முற்றுகை
தமிழன் மெரினா புரட்சி நடத்தி பெற்ற உரிமையை பறிக்க நினைக்கும் தாமரையின் கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து அவர் அறிக்கை வெளியிடவேண்டும். இல்லாவிட்டால், அவரது வீட்டை முற்றுகையிடுவோம். தமிழகம் முழுவதும் அவரது கொடும்பாவியை எரிப்போம்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்... இதற்கு தாமரை என்ன பதிலடி தரப்போகிறார் என்றுதெரியவில்லை என்றாலும், இதற்கான பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.