வாக்குபதிவு நிறைவு.. மாலை 6.30 மணி வரை.. கேரளா 70%, அசாம் 80%, மேற்கு வங்கத்தில் 77.68% வாக்கு பதிவு
சென்னை: கேரளாவில் இன்று ஒரே கட்டமாக 140 தொகுதிகளில் நடந்த வாக்குபதிவு நிறைவு பெற்றுள்ளது. அதேபோல் மேற்கு வங்கம், அசாம் சட்டசபை தேர்தலில் இன்று நடந்த மூன்றாம் கட்ட வாக்குபதிவு நிறைவு பெற்றுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மும்முரமாக நடந்து நிறைவு பெற்றது. 6.30 மணி வரை கேரளாவில் 70% வாக்குகள் பதிவாகி உள்ளது. மேலும் மேற்கு வங்கம் 77.68%; அசாமில் 80.32% வாக்குகள் பதிவாகி உள்ளது.

5 மாநில சட்டசபை தேர்தல் களைகட்டி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. அதே சமயம் கேரளாவிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. அசாம், மேற்கு வங்க மாநிலத்தில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. மேற்குவங்கத்தில் மொத்தமாக 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகம் உட்பட மொத்தம் 475 தொகுதிகளில் தற்போது தேர்தல் நடந்தது.

கேரளா
கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 2.74 கோடி வாக்காளர்கள் கேரளாவில் உள்ளனர். சிபிஎம் தலைமையிலான எல்டிஎப் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணிக்கும் இடையில் கடும் மோதல் நிலவுகிறது. 1980க்கு பின் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது இல்லை என்ற சாதனையை முறியடிக்க பினராயி தலைமையிலான சிபிஎம் அரசு முயன்று வருகிறது.

கேரளாவில் 1,32,83,724 ஆண் வாக்காளர்கள், 1,41,62,025 பெண் வாக்காளர்கள், 290 திருநங்கைகள் உள்ளனர். மொத்தம் 957 வேட்பாளர்கள் கேரளாவில் நடக்கும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் மூன்றாம் கட்டமாக 31 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 31 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக போட்டியிடுகிறது. இடதுசாரி கூட்டணியில் காங்கிரஸ் 7 இடங்களிலும் சிபிஎம் 13 இடங்களிலும் மற்ற கூட்டணி கட்சிகள் சில இடங்களிலும் போட்டியிடுகின்றன.

ஹவுரா நகரம், தெற்கு 24 பரகானாஸ் பகுதிகளில் உள்ள முக்கியமான தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த 31 தொகுதிகளில் 205 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக இன்று மேற்கு வங்கத்தில் 78,52,425 வாக்காளர்கள் உள்ளனர்.
அசாம்:
அசாமில் உள்ள 126 தொகுதிகளில் 86 தொகுதிகளுக்கு ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று 40 தொகுதிகளில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுக்கிறது. மீதம் உள்ள தொகுதிகளில் ஏஜிஎப் உட்பட பாஜகவின் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 24 இடங்களில் இங்கு போட்டியிடுகிறது. மீதம் உள்ள 16 இடங்களில் காங்கிரசின் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது. மொத்தமாக இன்று அசாமில் 71,40,426 வாக்காளர்கள் உள்ளனர்.
மொத்தம் 337 வேட்பாளர்கள் இன்று அசாமில் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் மே 2ஆம் தேதி 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.