திமுக - அதிமுகவிற்கு ரூ.260 கோடி நன்கொடை.. அள்ளி தந்த லாட்டரி நிறுவனம்! மார்ட்டின் நண்பர் தாராளம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி 2025-26ம் நிதியாண்டில் மட்டும் கொல்கத்தாவை சேர்ந்த 'டைகர் அசோசியேட்ஸ்' எனும் நிறுவனம் போட்டி போட்டு திமுக மற்றும் அதிமுகவிற்கு மட்டும் ரூ.260 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் செலவு விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளன. இதற்கிடையே தான் தற்போது தமிழகத்தில இருபெரும் கட்சிகளாக உள்ள திமுக, அதிமுக பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இருகட்சிகளும் 'டைகர் அசோசியேட்ஸ்' எனும் லாட்டரி நிறுவனத்திடம் இருந்து கடந்த ஓராண்டில் அதிகளவில் நன்கொடை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் இருகட்சிகளும் தாக்கல் செய்த நன்கொடை தொடர்பான ஆவணங்களில் இது இடம்பெற்றுள்ளது.
அதன்படி கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'டைகர் அசோசியேட்ஸ்' லாட்டரி நிறுவனம் திமுக மற்றும் அதிமுக என 2 கட்சிகளுக்கும் கடந்த 2025-26ம் ஆண்டில் மட்டும் ரூ.260 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளது. குறிப்பாக திமுகவை விட அதிமுகவிற்கு அதிக பணத்தை நன்கொடையாக வழங்கி உள்ளது.
இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டில் திமுகவிற்கு 14 தவணைகளில் மொத்தம் ரூ.125 கோடி நிதியை வழங்கி உள்ளது. 2025-26ம் ஆண்டில் திமுக மொத்தம் ரூ.191.9 கோடி நிதியை நன்கொடையாக பெற்றிருந்தது. அதன்படி பார்த்தால் திமுகவின் மொத்த நன்கொடையில் 'டைகர் அசோசியேட்ஸ்' நிறுவனம் மட்டும் 65.4 சதவீத பணத்தை வழங்கி உள்ளது.
மறுபுறம் இந்த நிறுவனம் அதிமுகவிற்கு 6 தவணைகளில் மட்டும் ரூ.135 கோடி கொடுத்துள்ளது. 2025-26ம் ஆண்டில் அதிமுக மொத்தம் 161.36 கோடியை நன்கொடையாக பெற்றது. அதன்படி பார்த்தால் 'டைகர் அசோசியேட்ஸ்' லாட்டரி நிறுவனம் மட்டும் 83.7 சதவீத பங்களிப்பை செய்துள்ளது.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் 2024-25ம் ஆண்டுகளை (கொடுத்த நன்கொடை ரூ.110 கோடி)ஒப்பிடும்போது 2025-26ல்(தேர்தல் ஆண்டு என்பதால் ரூ.260 கோடி) திமுக -அதிமுகவிற்கு இந்த நிறுவனம் நிதியை அள்ளிக்கொடுத்துள்ளது.
இந்த 'டைகர் அசோசியேட்ஸ்' லாட்டரி நிறுவனம் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சுப்பயன் நாகராஜன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் லாட்டரி அதிபர் சாண்டியகோ மார்ட்டினின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர்கள் 2 பேரும் வேறு ஒரு நிறுவனத்தில் இணை பங்குதாரர்களாக உள்ளனர்.
சாண்டியகோ மார்ட்டினும் ஏராளமான கட்சிகளுக்கு நன்கொடை வழங்கி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவரை போல் சுப்பயன் நாகராஜனும் தனது 'டைகர் அசோசியேட்ஸ்' நிறுவனம் மூலம் நன்கொடை வழங்கி உள்ளார். இருப்பினும் 'டைகர் அசோசியேட்ஸ்' நிறுவனத்தின் இந்த நன்கொடைக்கும், சாண்டியகோ மார்ட்டினுக்கும்தொடர்பு உள்ளதா? என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications
