பூந்தமல்லி பூரிக்கப்போகிறது.. ஏகப்பட்ட வசதிகள்.. 500 கோடி ரூபாயில் வருகிறது திரைப்பட நகரம்: பட்ஜெட்
சென்னை: 150 ஏக்கரில் சென்னை பூந்தமல்லிக்கு அருகே அதிநவீன திரைப்பட நகரம் உருவாக்க உள்ளதாக தமிழ்நாடு சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 500 கோடி செலவில் திரைப்பட நகரத்தில் பெரிய அளவிலான ஸ்டுடியோ, படப்பிடிப்பு அறைகள் விசுவல் எபெக்ட்ஸ் ஸ்டுடியோ அமையவுள்ளதாகவும் சட்டசபையில் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழ்நாடு சட்டசபையில் 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.

"காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்"
- எனும் திருக்குறளை கூறி தமிழக நிதிநிலை அறிக்கையை வாசிக்க தொடங்கினார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ. 5 கோடி ஒதுக்கப்படும். தொல்லியல் துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடியில் ரூ.17 கோடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படும்.
தொல்லியல் துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடியில் ரூ.17 கோடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படும்.
சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இனிவரும் காலங்களில் 600 நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்களையும் வெளியிட்டார்.
இந்த நிலையில் சென்னையை அடுத்த பூந்தமல்லிக்கு அருகே நவீன தொழில் நுட்ப எல்இடி சுவர்கள் அனைத்து வசதிகளுடன் கூடிய சர்வதேச தரத்தில் சென்னையில் புதிய திரைப்பட நகரம் பூந்தமல்லிக்கு அருகே உருவாக உள்ளது. ரூ.500 கோடி மதிப்பீட்டில் 152 ஏக்கரில் நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின், பூந்தமல்லி அருகில் 140 ஏக்கரில் 500 கோடி செலவில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த நவீன திரைப்பட நகரத்தில் பெரிய அளவிலான ஸ்டுடியோ, படப்பிடிப்பு அறைகள் விசுவல் எபெக்ட்ஸ் ஸ்டுடியோ அமையவுள்ளது. பணிமனை, உணவகம், அலுவலகங்கள், டப்பிங், எடிட்டிங், கூட்ட அரங்கம், முதலுதவி அறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள், நீதிமன்றங்கள், தெருக்கள் மற்றும் தயாரிப்புக்குப் பிந்தைய ஸ்டுடியோக்களின் மெகா அளவிலான தொகுப்புகள் மட்டுமின்றி, பட தயாரிப்பு நேரத்தையும் செலவையும் குறைக்க நவீன தொழில் நுட்ப எல்இடி சுவர்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் திரைப்பட நகரம் கட்டப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
பூந்தமல்லியில் தேசிய நெடுஞ்சாலை அருகே குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கரில் அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திரைப்பட நகரம் அமைக்க மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் புகழ்பெற்ற படப்பிடிப்பு மையமாக இருந்த சென்னை நகரம், தற்போது குறைந்த அளவிலான படப்பிடிப்பு தளங்கள் மற்றும் ஸ்டுடியோக்களை கொண்டுள்ளது, இதனால் தயாரிப்பாளர்கள் ஹைதராபாத், புதுச்சேரி அல்லது பெங்களூரு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தற்போது இந்த திரைப்பட நகரம் அமைந்தால் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று திரைப்படத்துறையினர் கூறியுள்ளனர். இதற்கான அறிவிப்பினை பட்ஜெட்டில் இன்று அறிவித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.












Click it and Unblock the Notifications