பழைய பன்னீர்செல்வமாய்.. பக்கா ப்ளான் போட்ட ஓபிஎஸ்! எடப்பாடிக்கு எதிராக ‘கொங்கு’ மண்டல புரட்சிப் படை?
சென்னை : தென் மாவட்டங்களில் தனக்கு இருக்கும் ஆதரவை சரிக்கும் வகையில் முக்குலத்தோர் நிர்வாகிகளுக்கு முக்கிய பதவிகளை அளித்து தனது சொந்த மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த வைத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியின் எதிர்ப்பாளர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி நெருக்கடி கொடுக்க ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
அதிமுகவில் சாதுரியமாக காய் நகர்த்திய எடப்பாடி பழனிச்சாமி மூன்று முறை முதல்வராக பதவி வகித்த ஓபிஎஸ்சை ஓரம் கட்டி கட்சியின் தலைமை பொறுப்பை 99.9% நிர்வாகிகளின் பேராதரவோடு கைப்பற்றியுள்ளார்.
மிகவும் அமைதியானவராகவே அடையாளம் காணப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கும் அளவுக்கு அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்காத ஓபிஎஸ் தரப்பு தற்போது கட்சியில் தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்வதற்காக பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி
தேர்தல் ஆணையத்தில் முறையீடு, நீதிமன்ற வழக்கு என அடுத்தடுத்து பல்வேறு சட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வந்தாலும் அவ்வப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் நிர்வாகிகள் நீக்கம் புதிய நிர்வாகிகள் நியமனம் என அதிரடி காட்டி வருகிறார் ஓபிஎஸ். ஆனால் இதனை பெரிய அளவில் எடப்பாடி பழனிச்சாமி நெருக்கடியாகவே எடுத்துக் கொள்ளவில்லை என தெரிய வருகிறது.

ஓபிஎஸ் அதிரடி
தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தனது பலத்தை அதிகப்படுத்தும் வகையில் நிர்வாகிகளுக்கு பதவியை வாரி கொடுத்ததோடு ஓபிஎஸ்-க்கு நெருக்கமாக இருந்தவர்களை தற்போது அவருக்கு எதிராகவே பேசவைத்து, அதிரடி காட்டி வருகிறது. குறிப்பாக ஓபிஎஸ்-ன் முன்னாள் ஆதரவாளரான ஆர்பி உதயகுமாரை தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்த வைத்து அவரை துரோகி என பேச வைத்தது ஓபிஎஸ் தரப்பு மற்றும் அவரது ஆதரவாளர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

புதியதாக நிர்வாகிகள்
இந்த நிலையில் தான் எடப்பாடி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார் ஓ பன்னீர்செல்வம். அந்த வகையில் தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் பட்டியல் ஒன்றிய செயலாளர் முதல் கிளைக் கழக நிர்வாகிகள் வரை புதியதாக நிர்வாகிகளை நியமனம் செய்து போட்டி அதிமுகவை உருவாக்க திட்டமிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஈரோடு சேலம் கோவை கரூர் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் பட்டியல் தயாராகி வருகிறது.'

கொங்கு புரட்சிப் படை
கடந்த காலங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமாக இருந்து தற்போது அவர் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து அவர்களை புதிய மாவட்ட செயலாளர்களாகவும், ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பதவிகள் வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. தேனியில் எப்படி ஆர்பி உதயகுமார் பேசினாரோ அதேபோல எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவரது சொந்த மாவட்டத்திலேயே போட்டி நிர்வாகிகளை உருவாக்கி பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நிர்வாகிகள் பட்டியல் விரைவில் விரைவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications