திமுகவின் இன்னொரு பெயர்… திருக்குவளை முத்துவேல் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில நேரங்களில் சில முழக்கங்கள் மக்களை ஈர்க்கக்கூடியதாக இருக்கும். அப்படித்தான் ஒரு காலகட்டத்தில், 'தி.மு.க' எனும் மூன்று எழுத்துக்கு 'திருக்குவளை மு கருணாநிதி' என்று புதிய அர்த்தத்தை திமுக தொண்டர்கள் முன்வைத்தார்கள்.

அந்த அளவுக்கு கட்சியுடன் கருணாநிதி என்ற பெயர் இரண்டறக் கலந்திருந்தது. அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக மறைந்த பிறகு, 27.07.1969 அன்று தி.மு.கழகத்தின் 4ஆவது பொதுக்குழுவில் கருணாநிதி முதன்முறையாக தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

 M. Karunanidhi built and saved DMK

அதற்குப் பின்னால், திமுகவின் அதிகாரபூர்வமான முகமாக மாறினார் கருணாநிதி. கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அட்டையில்கூட பெரியார், அண்ணாவுக்கு அடுத்து மூன்றாவதாக கருணாநிதியின் முகமே இலச்சினையாக முன்னிறுத்தப்பட்டது.

அதிகாரபூர்வமாக 1969இலிருந்து கட்சியின் தலைமையை ஏற்ற கருணாநிதி, 2008வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனிப்பெரும் ஆளுமையாகத் திகழ்ந்தார். 27.12.2008 நடைபெற்ற கட்சியின் 13ஆவது பொதுக்குழுவில் 10ஆவது முறையாக கட்சியின் தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓர் அரசியல் இயக்கத்தினை, இவரது அளவுக்கு நீண்ட நெடிய காலத்திற்கு தலைமையேற்று நடத்தியவர்கள் உலக அளவில் மிகமிகக் குறைவு. அந்த அளவுக்கு தனது இறுதிக்காலம்வரை அரசியல் களத்தில் ஆற்றல் மிக்கவராகவே கருணாநிதி வலம்வந்தார்.

பெரியாரிடமிருந்து 1949இல் அண்ணாதுரை பிரிந்துசென்று திமுகவைத் தொடங்கினார். அப்போது மிகக் கடுமையாகப் பெரியார் திமுகவினரை விமர்சித்துவந்தார்.

 M. Karunanidhi built and saved DMK

பெரியாரின் நெருங்கிய உறவினராக இருந்த ஈ.வெ.கி.சம்பத், அப்போது பெரியாரின் பக்கம் நிற்காமல் அண்ணாதுரை ஆரம்பித்த திமுகவின் பக்கம் சென்றார். ஆகவே திமுகவிலிருந்த முக்கியமான இரண்டாம் கட்டத் தலைவர்களின் வரிசையில் அவருக்கு ஓர் இடம் இருந்தது.

அவரைப்போலவே நெடுஞ்செழியன் முதலிய பலர் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வரிசையில் இருந்தனர். இவர்களுக்கு இணையான வரிசையில் கருணாநிதி இருந்தாலும், அண்ணாதுரையின் 'தளபதி'யாக கருணாநிதி மட்டுமே முன்வைக்கப்பட்டார்.

அண்ணாதுரைக்குப் பின் கட்சியின் முகம்: தனது ஆற்றலால், செயல்பாட்டால் மிகத்துடிப்பாக இருந்த கருணாநிதி, அண்ணாதுரையின் மறைவுக்குப் பின் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று தலைவரானார்.

அண்ணாதுரையின் காலகட்டத்திலேயே திமுகவில் முதன்முறையாக ஒரு பிளவு ஏற்பட்டது. 1961இல் அண்ணாதுரையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு சம்பத் பிரிந்துசென்று தமிழ்த் தேசியக் கட்சியைத் தொடங்கினார். ஆனாலும் அவரால் அதை நிலையான கட்சியாகக் கட்டமைக்க முடியவில்லை. இறுதியில் 1964இல் காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைத்துவிட்டார் சம்பத்.

அப்படியான காலகட்டத்தில்கூட மிகக் கட்டுக்கோப்பாக அண்ணாதுரையின் பக்கம் தடுமாற்றம் இல்லாமல் நின்றவர் கருணாநிதி. அதன்பின்னர் கருணாநிதியின் உற்ற நண்பராக இருந்த எம்.ஜி. இராமச்சந்திரன் கட்சியில் ஒரு பிளவை உண்டாக்கினார்.

 M. Karunanidhi built and saved DMK

திமுகவிலிருந்த காலங்களில் கருணாநிதியை எம்.ஜி.ஆர்., 'ஆண்டவரே' என்றே அன்போடு அழைத்துவந்தார். அவரே பின்னாளில் கருணாநிதிக்கு எதிராக அரசியல் செய்யத் தொடங்கினார்.

திமுகவுக்கு எதிராக 1972 அக்டோபர் 17 அன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை புதியதாகத் தோற்றுவித்தார். சில ஆண்டுகள் கழித்து கட்சியின் பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என மாற்றினார். நெருக்கடி நிலை காலத்தில் மாநிலக் கட்சிகளை இந்திரா காந்தி முடக்கத் திட்டமிட்டுவருவதாக ஒரு தகவல் பரவியதன் பெயரில் இந்த முடிவை எடுத்தார் எம்.ஜி,ஆர்.

அதிமுக உருவான காலகட்டத்தை திமுகவில் மாபெரும் பிளவு ஏற்பட்ட காலம் எனத் தமிழக அரசியல் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

அதிமுக உருவான பின்னர் அரசியல் களத்தில் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் இரு துருவங்களாகவே செயல்பட்டனர்.

 M. Karunanidhi built and saved DMK

திமுகவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பிளவுகள்: இதே காலகட்டத்தை ஒட்டி 1977 ஆம் ஆண்டு திமுகவின் பொதுச்செயலாளராக இருந்துவந்த இரா. நெடுஞ்செழியன் திமுகவிலிருந்து விலகினார். 'மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி எம்.ஜி.ஆருடன் கூட்டணி வைத்தது. பின்னர் அதிமுகவுடனேயே இணைக்கப் பட்டது.

இதற்குப் பின்னால் திமுகவில் ஏற்பட்ட பெரிய பிளவை வை.கோபால்சாமி ஏற்படுத்தினார். 1993இல் வை கோபால்சாமி திமுகவிலிருந்து வெளியேற்றப் பட்டார்.

ஈ.வெ.கி. சம்பத், அடுத்து எம்.ஜி.ஆர்., இரா.நெடுஞ்செழியன் பின்னாளில் வை கோபால்சாமி என சில தலைவர்கள் திமுகவைவிட்டு வெளியேறிய பிறகு இக்கட்சி காணாமல் போய்விடும் என சில குரல்கள் எழுந்தன.

ஆனால், அதற்கு எதிர்த்திசையில் வரலாறு பயணித்தது. இந்தத் தலைவர்கள் வெளியேறிய பிறகும் கட்சியைக் கட்டுக்கோப்புடன் வழிநடத்தினார் கருணாநிதி. ஆட்சியில் இல்லாமல் எதிர்க்கட்சியின் வரிசையிலேயே இருந்து தன் வலிமையான 'நா' வன்மையால் தொண்டர்கள் நெஞ்சத்தில் மிகப் பெரிய உயரத்தில் உட்கார்ந்திருந்தார்.

எதிர்க்கட்சியாக இருந்த காலகட்டத்தில் 'முரசொலி'யில் கருணாநிதி எழுதிய கடிதங்களால் அவரது தொண்டர்கள் மேலும் மேலும் உற்சாகமடைந்தனர். குறிப்பாக,1980களுக்குப் பிறகு வெளியான 'பாலைவன ரோஜாக்கள்', 'சட்டம் ஒரு விளையாட்டு','ஒரே ரத்தம்' போன்ற திரைப்படங்கள் மூலம் மீண்டும் கட்சி எல்லையைக் கடந்து, தலைமுறை கடந்து பொது ரசிகர்களை தன் வசனங்களால் ஈர்த்துவந்தார் கருணாநிதி.

 M. Karunanidhi built and saved DMK

இலக்கியங்கள் மூலம் கட்சி வளர்ப்பு: இதே காலகட்டத்தில்தான் அவர் தனது வாழ்க்கை வரலாற்றை 'நெஞ்சுக்கு நீதி' எனும் தலைப்பில் 'தினமணி கதிரி'ல் எழுதத் தொடங்கினார். அரசியல்ரீதியாக அந்தப் பத்திரிகையுடன் கருத்துமோதல் எழவே, பின்னர் பத்திரிகையாளர் சாவியை வைத்து 'குங்குமம்' என்ற பெயரில் சொந்தமாக பத்திரிகை ஆரம்பித்த கருணாநிதி, அதில் தன் 'நெஞ்சுக்கு நீதி'யை எழுத ஆரம்பித்தார்.

தனது பொது வாழ்க்கைக்கு இடையில் இலக்கியத்திற்கும் சமமான இடத்தை அளித்துவந்தார் கருணாநிதி. அவரது முதல் நாவலான 'புதையல்' 1960இல் வெளியானது. அதன்பிறகு 1970களுக்குப் பின்னால் அதிவேகம் அடைந்தது, அவரது எழுத்து வாழ்க்கை. ஒரு பக்கம் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதிக் கொண்டே 'தென்பாண்டிச் சிங்கம்'(1983), 'பொன்னர் சங்கர்'(1987), 'பாயும் புலி பண்டார வன்னியன்'(1991) என திரைப்படங்களிலும் முழு வீச்சில் இயங்கினார்.

ஒரு இயக்கத்தின் தலைவராக முழு நேரமும் இயங்கிக்கொண்டு இலக்கிய உலகத்திலும் அவர் இடைவிடாமல் இயங்கிவந்த ஆற்றலைக் கண்டு அவரது கட்சித் தொண்டர்கள் சிலிர்ப்பை அடைந்தனர். 'இவருக்கு ஈடு வேறு யாரும் இல்லை' என அவரைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த பலதுறை ஆற்றல்தான் கருணாநிதியின் ஆளுமைக்கு உரம் போட்டது. குறிப்பாக கருணாநிதி தலைமையில் நடைபெற்ற கவி அரங்க பாணி கவிதை கட்சி வேறுபாட்டைக் கடந்த பல பொதுமக்களையும் ஈர்த்து வந்தது.

அருப்புக்கோட்டை மற்றும் நெல்லை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் திமுக தோற்றது. அப்போது கருணாநிதி எழுதிய 'வெற்றிபெற்ற நாம் இங்கே வீரவாள் சுழற்றி நிற்க' எனத் தொடங்கும் அரசியல் கவிதை, காலத்தைத் தாண்டியும் அவரை விரும்பக்கூடிய ஆளுமை மிக்கவராக அடையாளப்படுத்தி இருக்கிறது.

 M. Karunanidhi built and saved DMK

இடியமின் ஆட்சியில் இடைத்தேர்தல்: அக்கவிதையில் அவர், 'இந்த இடியமின் ஆட்சியில் இடைத்தேர்தல் நமக்கு இடைத்தேர்தல் எண்ணம் எள் முனையும் வேண்டாம் என்று.... மறைந்திருந்து வாலியை வீழ்த்திய மாண்புமிகு ராமச்சந்திரனை மாவீரன் என்று போற்ற மகாகவி கம்பனே தயங்கினான் என்றால், மாண்டாலும் வெற்றி வாலிக்குத்தானே' என்று பல இடிகள் இடித்திருப்பார்.

இராமாயணத்தை முன்வைத்து இராமனை இராமச்சந்திரனாக்கி தன்னை வாலியாக உவமைப்படுத்தி கருணாநிதி எழுதிய இக்கவிதை எதிர் அணியிலிருந்தவர்களையும் இலக்கிய நயம் பேசி ஈர்த்தது.

சொல்லப்போனால், தனது இலக்கிய திறமையை முழுக்க கட்சி பயன்பெறுவதற்காக எந்த வழிகளில் எல்லாம் பயன்படுத்த முடியும் என்பதை நடைமுறையில் செய்துகாட்டினார் கருணாநிதி.

இவரது இலக்கிய இன்பத்தைச் சுவைத்த உயிரினும் மேலான அவரது உடன்பிறப்புகள், திமுகதான் இவர்; இவர்தான் திமுக என நம்பிவருகின்றனர்.

ஆகவேதான் திமுக என்ற 3 எழுத்தை, திருக்குவளை முத்துவேல் கருணாநிதி என விரித்து புதிய பொருள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+