காவி உடையுடன் அம்பேத்கர் போஸ்டர்- அர்ஜூன் சம்பத்தை தாக்க வழக்கறிஞர்கள் முயற்சி- தப்பி ஓட்டம்!
சென்னை: அண்ணல் அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து போஸ்டர் வெளியிட்டதற்காக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் தாக்க முயன்றனர். இதனையடுத்து அங்கிருந்து ஆதரவாளர்களுடன் அர்ஜூன் சம்பத் பாதுகாப்பாக தப்பி வெளியேறினார்.
நான் இந்துவாக சாகமாட்டேன் என்பது அம்பேத்கர் எழுதிய நூலின் தலைப்பு. தாமும் தமது ஆதரவாளர்களுமாக பல லட்சம் பேருடன் இந்து மதத்தை விட்டு வெளியேறி பவுத்த மதத்தில் இணைந்தவர் அண்ணல் அம்பேத்கர்.
ஆனால் அம்பேத்கரை இந்துத்துவா கோஷ்டியினர் கொண்டாடி வருகின்றனர். அம்பேத்கர் மனுதர்ம சாஸ்திரத்தை எதிர்த்தவர்; வர்ணாஸ்சிரம கோட்பாடுகளை நிராகரித்தவர். இந்து மதத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த காரணத்தாலேயே பெரும் தீண்டாமை கொடுமைகளை அனுபவித்தவர்; அந்த வலியால் இந்து மதத்தை நிராகரித்தவர் அம்பேத்கர்.
அம்பேத்கருக்கு காவி சட்டை, திருநீறு பட்டையுடன் போஸ்டர்- அர்ஜூன் சம்பத் கட்சி நிர்வாகிகள் 2 பேர் கைது

இந்து மக்கள் கட்சி போஸ்டர்கள்
இருந்தபோதும் தலித்துகளின் வாக்கு வங்கிக்காக இந்துத்துவா அமைப்பினர் அம்பேத்கரை கொண்டாடுகின்றனர். அம்பேத்கரை முன்னிறுத்தி வாக்கு வங்கி அரசியலை பாஜக செய்தும் வருகிறது. அம்பேத்கரின் நினைவு நாளான இன்று கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்து மக்கள் கட்சியினர் கைது
எந்த இந்துமதத்தை அம்பேத்கர் எதிர்த்தாரோ அவருக்கு காவி சட்டை அணிவித்து, திருநீறு பட்டையை போட்டுவிட்டு இந்துவாக அடையாளப்படுத்தி அந்த போஸ்டரில் அச்சடிக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டருக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. கும்பகோணத்தில் இந்த போஸ்டர்கள் நீக்கப்பட்டன. மேலும் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையிலான இந்த போஸ்டர்களை வெளியிட்ட 2 இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கைதும் செய்யப்பட்டனர்.

ஹைகோர்ட்டில் போராட்டம்
இந்த பின்னணியில் இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் வருகை தந்தார். அம்பேத்கர் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி கோரும் வழக்குக்காக அர்ஜூன் சம்பத், உயர்நீதிமன்றத்துக்கு வருகை தந்தார். அவருக்கு வழக்கறிஞர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தாக்குதல் முயற்சி
இந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ஆதரவாளர்களுடன் வலம் வந்த அர்ஜூன் சம்பத்தை சில வழக்கறிஞர்கள் அருகே சென்று தாக்கவும் முயற்சித்தனர். இந்த தாக்குதலில் இருந்து தப்பினார் அர்ஜூன் சம்பத். பின்னர் அங்கிருந்து தப்பி வெளியேறினார். இதனால் சென்னை உயர்நீதிமன்ற வளாகம் பெரும் பதற்றத்துடன் இருந்தது.