"முத்திடுச்சி" போங்க.. வெந்து தணிந்தது "திராவிடம்".. இந்தா வந்துட்டாங்கல்ல.. பாயிண்ட்டை பிடித்த பாஜக
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிரான போராட்டத்தை திமுக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதற்கு பாஜகவும் பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது... பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வருகின்றன...
ஆளுநர் மாளிகை ஆர்எஸ்எஸ் கூடாரமாக மாறி வருகிறது என்று, கூட்டணி கட்சிகள் வெளிப்படையாகவே சொல்லி வருகின்றன.. இதன் எதிரொலியாகத்தான், தமிழக ஆளுநருக்காக ஒதுக்கப்பட்ட ராஜ்பவனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அன்றே குரலை எழுப்பியிருந்தது விசிக..

அதுமட்டுமல்ல, "ஆளுநர் ஆர்என்ரவி, ஆர்எஸ்எஸ்ரவியாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. சனாதனம் பற்றி பேசிய அவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகி, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தொண்டாற்ற போக வேண்டும்" என்று திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
மாணவர் அணி: தற்போது ஆளுநர் மீதான அதிருப்திகள் வெடித்து வருகின்றன.. கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் கட்சி, திராவிடர் கட்சி உட்பட திமுகவின் அனைத்து தோழமை கட்சிகளும், ஆளுநரை, மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை அதிகமாக வலியுறுத்த துவங்கி உள்ளன.. நேற்றுகூட திமுகவின் மாணவர் அணி உள்ளிட்ட பல்வேறு மாணவர் சங்கங்கள் போராட்டத்தில் குதித்துள்ளன..

தேசிய கல்விக்கொள்கையை ஆளுநர் திணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்களும் எழுப்பப்பட்டன. வேந்தர் பட்டம் ஆளுநர் ரவிக்கு ஒரு கேடா? மாணவர்களை வஞ்சிக்கும் ஆளுநர் ராஜ்பவனை விட்டே வெளியேற வேண்டும் என திமுக மாணவரணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கோஷமிட, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மற்றவர்களும் முழக்கமிட்டனர். ஆனால், பாஜகவோ, திமுகவுக்கு வேறு மாதிரியாக, எதிர்வினையாற்றி வருகிறது.
வித்தியாசம்: மதுரையில் ஒருத்தர் வித்தியாசமாக போஸ்டர் அடித்தே ஒட்டிவிட்டார்.. வழக்கமாக போஸ்டர்கள் என்றாலே, கல்யாணம், காதுகுத்து, ரசிகர் மன்றம், கோயில் திருவிழா, இப்படித்தான் போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள்.. அதுவும் மதுரையில், விஜய் ரசிகர்கள் வருடாவருடம் போஸ்டர் அடித்து ஒட்டி, அவரை அரசியலுக்கு அழைத்து கொண்டிருக்கிறார்கள்.. இப்போது அரசியல் களமே தகத்து என காணப்படுவதால், திமுக - பாஜக போஸ்டர்கள் எதிரொலிக்கின்றன.

செந்தில்பாலாஜி கைதானபோதே, இந்த போஸ்டர் மோதல் மதுரை மாவட்டத்தில் வெடித்துவிட்டது.. திருப்பரங்குன்றம் பகுதியில் திமுகவினர், "மத்திய அரசே.. உங்க மிரட்டலுக்கு திமுக எப்போதும் அஞ்சாது, நாங்க மிசாவையே பார்த்தவங்க; பயம் எங்க பயோ டேட்டாவிலேயே கிடையாது' என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்..
ஆச்சரியக்குறி: பதிலுக்கு பாஜகவினர், 'சிறைபட்டது அணில்.. அடடே ஆச்சரியக்குறி, திராவிட மாடலே! நீங்க மிசாவை தானே பார்த்தீங்க.. அமித்ஷாவை பார்த்ததில்லையே? பயம் உங்க பயோடேட்டாலயே இல்ல.. பார்த்தாலே தெரியுதுல' என்று வாசகத்தை அச்சிட்டு, நெஞ்சுவலியுடன் கதறிய செந்தில்பாலாஜியின் போட்டோவையும் ஒட்டியிருந்தனர்.
இப்போது ஆளுநர் விவகாரம் தலைதூக்கவும், இதை வைத்து திமுகவுக்கு பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.. மதுரை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் ஒருவர், பாரதியாரின் பாட்டையெல்லாம் இழுத்துக் கொண்டுவந்து, போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார்..
கவுன்சிலர்: மதுரை மாநகராட்சி 86-வார்டு கவுன்சிலர் பூமா.. இவரது கணவர் பெயர் ஜனா ஸ்ரீ முருகன்.. இந்த பெயர்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.. அதில், "அக்கினி குஞ்சொன்று கண்டேன்" என்ற கவிதையில் வரும் வரிகளை ஆளுநருடன் ஒப்பிட்டுள்ளதுடன், ஆர்என் ரவியை தமிழக ஆளுநராக நியமித்த பிரதமர் மோடியின் செயலை பாராட்டியும் வரிகள் இடம்பெற்றுள்ளன.
"வெந்து தணிந்தது காடு" என்ற பாரதியாரின் வரிகளுக்கு பதிலாக, வெந்து தணிந்தது திராவிடம் என்று அச்சடித்து ஒட்டியுள்ளனர்.. ஆளுநருக்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர்தான், மதுரையையே கதிகலங்க வைத்து கொண்டிருக்கிறது..
இந்த போஸ்டரை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள், "போச்சுடா.. பாரதியார் பாட்டையே மாத்திட்டீங்களா?" என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதற்கு திமுக என்ன பதிலடி தரப்போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications