சொத்து வாங்குவோருக்கு சிக்கல்.. பத்திரப்பதிவு மேல்முறையீட்டு மனுக்களுக்கு தடையா? பீதியில் பொதுமக்கள்
சென்னை: தமிழகத்தில் சொத்து வாங்குவோர் மத்தியில் வழிகாட்டி மதிப்பு விவகாரம் இப்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது. குறிப்பாக, நில வழிகாட்டி மதிப்பு (Guideline Value) தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை வாங்கப் பதிவுத் துறை அதிகாரப்பூர்வமற்ற தடையை விதித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
வழிகாட்டி மதிப்பு என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.. தமிழக அரசின் பதிவுத் துறையால் ஒரு குறிப்பிட்ட பகுதியின் நிலம் அல்லது கட்டிடத்திற்கு நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச விலையே வழிகாட்டி மதிப்பு. ஒரு தெருவிலோ அல்லது குறிப்பிட்ட சர்வே எண்ணிலோ உள்ள சொத்து இந்த விலைக்குக் குறையாமல் தான் விற்கப்பட வேண்டும் என்பது அரசின் கணக்கு.

சொத்து வாங்குவோர் பத்திரம்
இந்தப் பத்திரப் பதிவின் போது கட்ட வேண்டிய முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணங்கள் இந்த மதிப்பைக் கொண்டே கணக்கிடப்படுகின்றன. சந்தை விலை சில இடங்களில் இதைவிட அதிகமாக இருக்கலாம்.. ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணம் இந்த வழிகாட்டி மதிப்பை விடக் குறைவாக இருக்கக் கூடாது என்பது விதி.
தமிழகத்தில் சொத்து வாங்குவோர் பத்திரத்தில் அதன் மதிப்பைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், நிஜ நிலவரம் என்னவென்றால் பல இடங்களில் உண்மையான விற்பனை விலை, அரசின் வழிகாட்டி மதிப்பை விடக் குறைவாகவே இருக்கிறது. இத்தகைய சூழலில், கூடுதல் கட்டணம் செலுத்த விரும்பாத பொதுமக்கள், சட்டப்படி மேல்முறையீடு செய்யக் கோரிக்கை விடுக்கலாம்.
அறிவிக்கப்படாத குபீர் தடை
இந்த மனுக்கள் மீது வருவாய் துறை சார்பில் உதவி கலெக்டர் தலைமையிலான குழு நேரில் சென்று விசாரணை நடத்தும். அந்த இடத்தின் அமைவிடம் மற்றும் பயன்பாட்டை ஆய்வு செய்து, நியாயமான மதிப்பை அவர்கள் நிர்ணயிப்பார்கள்.. அதன் பிறகே இறுதிப் பத்திரப்பதிவு நடக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறையில் மேலிட அனுமதி வேண்டும் என்ற மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதாவது சார்-பதிவாளர்கள் நேரடியாக மனுவை வாங்காமல், மாவட்டப் பதிவாளர் மூலம் மேலிடத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், இப்போது இந்த மனுக்களைப் பெறுவதற்கே அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாகக் கூறப்படுகிறது.
கூடுதல் கட்டணம் - ரியல் எஸ்டேட்
இதனால் சந்தை விலையை விடக் கூடுதலாகக் கட்டணம் கட்ட முடியாமல் பொதுமக்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளனர். சட்டப்படி மேல்முறையீடு செய்ய உரிமை இருந்தும், தேர்தல் நேரத்தைக் காரணம் காட்டி மனுக்களை அதிகாரிகள் வாங்க மறுப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது அமைச்சரின் உத்தரவா அல்லது அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவா என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்..
அதிகாரிகளின் இந்த பிடிவாதமான போக்கினால் தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பரிமாற்றங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரமும் ரியல் எஸ்டேட் தொழிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது..












Click it and Unblock the Notifications