பணிந்தார் கமல்ஹாசன்.. விருப்பமனு கட்டணத்தை திரும்ப வழங்குவதாக அறிவித்த மக்கள் நீதி மய்யம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. ஆனால் கட்சியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 60 பேர் தலா ரூ.50 ஆயிரம் கொடுத்து விருப்பமனுக்களை பெற்றனர். கட்சி போட்டியிடாததால் இந்த கட்டணத்தை திரும்ப கேட்டனர். ஆனால் பணம் திரும்ப கொடுக்கப்படாது. கட்சி நிதியில் சேர்க்கப்பட்டு விட்டது என நிர்வாகிகள் தெரிவித்தனர். இது விவாதத்தை கிளப்பிய நிலையில் விருப்பமனு கட்டணத்தை நாளை முதல் பெற்று கொள்ளலாம் என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் உள்ளது. இதற்கு பரிசாக கமல்ஹாசனை, திமுக ராஜ்யசபா எம்பியாக்கி உள்ளது. இந்நிலையில் தான் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர்கள் போட்டியிட ஆர்வம் காட்டினர்.
இதனால் கமல்ஹாசன் தரப்பில் திமுக கூட்டணியில் தொகுதிகள் கேட்கப்பட்டது. திமுக சார்பில் மொத்தம் 3 தொகுதிகள் வரை வழங்கவும், அந்த தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வைக்க திமுக விரும்பியது.

போட்டியில் விலகிய மநீம
ஆனால் மக்கள் நீதி மய்யம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விரும்பவில்லை. தனிச்சின்னமான தங்களின் டார்ச்லைட் சின்னத்தில் களமிறங்க முயன்றது. இதுதொடர்பாக திமுகவுடன் மொத்தம் 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் திமுக பிடிகொடுக்கவில்லை.
உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று கூறியது. இதனால் மக்கள் நீதி மய்யம் போட்டியில் இருந்து விலகியது. சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை. அதேவேளையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறது என்று கமல்ஹாசன் அறிவித்தார்.
ரூ.50,000 விற்கப்பட்ட விருப்பமனு
ஆனால், அதற்கு முன்பாகவே போட்டியிட விரும்பும் நபர்களுக்கு மக்கள் நீதி மய்யம் விருப்பமனு வழங்கியது. ரூ.50 ஆயிரம் கட்டணமாக செலுத்தி விருப்பமனுவை பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உள்ளவர்கள் ரூ.50 ஆயிரம் செலுத்தி விருப்பமனுக்களை வாங்கினர். மொத்தம் 60 பேர் விருப்பமனு வாங்கியிருந்தனர்.
திரும்ப வழங்க முடியாததால் சர்ச்சை
இதன்மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ரூ.30 லட்சம் வரை கட்டணமாக வந்தது. ஆனால் தேர்தலில் போட்டியில் விலகியதால் விருப்பமனு கொடுத்தவர்கள் தங்களின் பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளோ, ''விருப்பமனுவுக்கான கட்டணம் கட்சி நிதியாக கருதப்படும். இதனால் கட்டணத்தை திரும்ப வழங்க முடியாது'' என்று கூறினர். இது சர்ச்சையை கிளப்பியது.
நாளை முதல் 16 வரை திரும்ப பெறலாம்
இந்நிலையில் தான் மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது. இதுதொடர்பாக கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில் ஆறுமுகம் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ''2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட விருப்பம மனு தாக்கல் செய்திருந்தவர்கள, தாங்கள் செலுத்திய கட்டண தொகையை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை (8-4-2026) முதல் ஏப்ரல் 16ம் தேதிக்குள் நேரில் வந்து திரும்ப பெற்று கொள்ளலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications