‛‛அந்தர் பல்டி’’.. சில மணிநேரத்தில் மம்தா மனமாற்றம்.. முதல்வர் ஸ்டாலின் சந்திப்பில் நடந்தது என்ன?
சென்னை: சென்னையில் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தேசிய அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில் சில மணிநேரங்களில் மம்தா பானர்ஜி மனம் மாறிய விஷயம் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளார். இவருக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது.
இருப்பினும் கடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை தக்க வைத்துள்ளார். இதன்மூலம் மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி பொறுப்பேற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

மம்தா பானர்ஜி வருகை
தற்போதும் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையேயான உரசல் தொடர்ந்து வருகிறது. இதனால் தேசிய அளவில் காங்கிரஸ் இல்லாத 3வது அணியை உருவாக்க மம்தா பானர்ஜி முயன்று வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் தான் மம்தா பானர்ஜி 2 நாள் சுற்றுப்பயணமாக சென்னை வருவதாகவும், சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஸ்டாலினுடன் சந்திப்பு
மேற்கு வங்க மாநில ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த இல கணேசன் உள்ள நிலையில் அவர் சகோதரரின் 80வது பிறந்தநாள் விழா நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இல கணேசன் அழைப்பு விடுத்த நிலையில் மம்தா பானர்ஜி இன்று சென்னை புறப்பட்டு வந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.

மம்தா பானர்ஜி பேட்டி
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளதால் இந்த சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் தான் சென்னை புறப்படுவதற்கு முன்பு மம்தா பானர்ஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‛‛சென்னை பயணத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சந்திக்க உள்ளேன். ஸ்டாலின் எனது அரசியல் நண்பர். சென்னை செல்வதால் மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளேன்'' என்றார். மேலும் அரசியல் பற்றி விவாதிக்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க, அவர், ‛‛இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது அரசியல் பேசுவது வழக்கமானது தான்'' என்றார்.

தேசிய அளவில் கவனம்
மம்தா பானர்ஜி இவ்வாறு கூறியதால் இந்த சந்திப்பு என்பது தேசிய அளவில் கவனம் பெற்றது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உன்னிப்பாக கவனித்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் மம்தா பானர்ஜி காங்கிரஸை விரும்பாத நிலையில் திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளது. இதற்கிடையே தான் சென்னையில் முதல்வர் ஸ்டாலின்-மம்தா பானர்ஜி ஆகியோர் சந்தித்து பேசினார். இதில் தேசிய அரசியல் பற்றி விவாதிக்கலாம் என்பதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ஸ்டாலின்-மம்தா பேட்டி
இதையடுத்து ஸ்டாலின், மம்தா பானர்ஜி ஆகியோர் சந்திப்புக்கு பிறகு ஒருசேர பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ஸ்டாலின் கூறுகையில், ‛‛மம்தா பானர்ஜி என்னை மேற்கு வங்கத்துக்கு அழைத்தார். இந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அரசியல், தேர்தல் குறித்து பேசவில்லை'' என்றார். அதேபோல் மம்தா பானர்ஜி, ‛‛தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என் சகோதரர் போன்றவர். சென்னை வந்துவிட்டு எப்படி முதல்வர் ஸ்டாலினை சந்திக்காமல் செல்ல முடியும். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். இரண்டு அரசியல் தலைவர்களும் அரசியலை தவிர்த்து வேறு விஷயங்கள் பற்றியும் பேசலாம். இந்த சந்திப்பில் நாங்கள் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை'' என்றார்.

சில மணிநேரங்களில் மாற்றம்
சென்னை புறப்படுவதற்கு முன்பு மம்தா பானர்ஜி, ஸ்டாலினை அரசியல் நண்பர் எனவும், இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது அரசியல் பேசுவது வழக்கமானது தான் எனவும் கூறியிருந்தார். ஆனால் ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பிறகு மம்தா, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. ஸ்டாலின் என் சகோதரர் போன்றவர். இதில் அரசியல் பேசவில்லை என கூறினார். இதன்மூலம் சென்னை வரும் சில மணிநேரத்தில் மம்தா பானர்ஜி மனதை மாற்றி உள்ளது தெரியவந்துள்ளது.

அரசியல் பேசினார்களோ?
இருப்பினும் இந்த சந்திப்பில் இருவரும் அரசியல் சார்ந்து சில விஷயங்களை விவாதித்து இருக்கலாம். இருப்பினும் காங்கிரஸ் கட்சியுடன் ஸ்டாலின் கூட்டணியில் இருப்பதால் அதுபற்றி பொதுவெளியில் தெரிவிக்காமல் இருவரும் நாகரீகம் கருதி மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் என கூறி இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications