கல்வி தொலைக்காட்சியின் தற்காலிக சிஇஓ-ஆக மணிகண்ட பூபதி நியமனம்! தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காகத் தொடங்கப்பட்ட கல்வி டிவி-க்கு தற்போது புதிய முதன்மை செயல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் எளிதாக வீட்டில் இருந்தபடியே கல்வி கற்கப் பள்ளிக் கல்வித் துறை சார்பில், கல்வி டிவி தொடங்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளி மாணவர்கள் வீடுகளிலேயே முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி டிவி தான் பெரியளவில் உதவியது.
இதன் காரணமாகவே திமுக ஆட்சி அமைந்த பின்னரும் கல்வி டிவி மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் கல்வி டிவியில் ஒளிபரப்பப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தச் சூழலில் கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலராக மணிகண்ட பூபதி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். சில தனியார் தொலைக்காட்சிகளிலும் யூ-டியூப்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இவர்.
சொந்த ஊரில் இருந்து சென்னை வருகிறீர்களா? ஸ்பெஷல் பஸ் இருக்கு..போக்குவரத்துத்துறை
தற்காலிக அடிப்படையில் இரண்டு ஆண்டுக் காலத்திற்கு மணிகண்ட பூபதி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், செயல்பாடுகளைப் பொறுத்து அவரது பணி நீட்டிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.