மத்திய அரசு வருவாய்க்காக என்.எல்.சியால் நீர்நிலைகளில் 115 மடங்கு பாதரச மாசுபாடு- வேல்முருகன் ஆவேசம்
சென்னை: மத்திய அரசின் வருவாய் சுரண்டலுக்காக கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும், பொதுமக்களின் ஆரோக்கியமான வாழ்வியலையும் என்.எல்.சி. நிறுவனம் பலி கொடுப்பதை ஒருபோதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஏற்றுக்கொள்ளாது; என்.எல்.சி. நிறுவனத்தால் நீர்நிலைகளில் பாதரசத்தின் அளவு 115 மடங்கு அதிகரித்துவிட்டது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. சாடியுள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறியதாவது: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தின் அனல் மின் நிலையங்கள் மற்றும் சுரங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதனையொட்டியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலை, நிலத்தடி நீர், மண் மாதிரிகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வுக்குட்படுத்தி, அதன் அறிக்கையைத் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்பித்துள்ளது.

அபாயகர அளவில் பாதரசம்
அவ்வறிக்கையின் மூலம், நெய்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர் மற்றும் மண் மாதிரிகளில் அபாயகரமான அளவில் பாதரசம், நிக்கல், லெட், காட்மியம் உள்ளிட்ட கன உலோகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
அதாவது, மனித ஆரோக்கியத்திற்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடிய பாதரசமானது நீர்நிலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 115 மடங்கு அதிகமாகவும், நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 62 மடங்கு அதிகமாகவும் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதிக அளவில் பாதரசம் கலப்பு
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு மேற்கொண்ட 17 நீர்நிலைகளில், 15 இடங்களில் பாதரசம் பாதுகாப்பான அளவுகளை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பக்கிங்காம் கால்வாயில் பாதுகாப்பான அளவை விட 115 மடங்கு பாதரசம் அதிகமாக இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, குடிக்கவோ நீர்ப்பாசனத்திற்கோ தகுதியில்லாத நீர்நிலை என்பதால், பாதரசத்தின் அபாயகர அளவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்பு
வளையமாதேவி கூட்டுக்குடிநீர் திட்டம், பரவனாறு, வாலஜா ஏரி, அய்யன் ஏரி ஆகிய நீர்நிலைகள் உள்ள நிலையில், அவற்றை எப்படி குடிநீர் ஆதாரமாகக் கருதாமல் இருக்க முடியும்? ஏரி, குளங்கள் ஆகிய நீர்நிலைகள் இருக்கிறதென்றால், அவைகள் நிலத்தடி நீருக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும். நீர்நிலை உயிரினங்களுக்கு முக்கிய பயனுள்ளதாக இருக்கும்.
சோற்றில் பூசணிக்காயை மறைப்பது என்ற பழமொழிக்கு ஏற்ப, அடிப்படை உண்மைகளை மறைத்து விட்டு, வாலஜா ஏரி, அய்யன் ஏரி நீர்நிலைகளை குடிநீர் ஆதாரமாக கருதவில்லை என்ற தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது.
என்.எல்.சிக்கு ஆதரவான நிலைப்பாடு?
இந்நீர்நிலைகளில் எப்படி கன உலோகங்கள் கண்டறியப்பட்டுள்ளன? மாசடைந்த நீர்நிலைகள் என்றால் மாசுபாட்டிற்கு யார் காரணம்? இந்நீர் நிலைகளில் நீர் அருந்தும் கால்நடைகளுக்கும், நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? என்கிற கேள்விகளுக் கெல்லாம் மாசு கட்டுப்பாடு வாரியம் வெளிப்படையாக பதிலளிக்காமல், பாதிப்புகள் குறித்து மட்டுமே ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டிருப்பது, என்.எல்.சி நிறுவனத்தின் அத்துமீறல்களை மூடி மறைக்கும் செயலாகும்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சோதனைக்கு உட்படுத்திய 9 நிலத்தடி நீர் மாதிரிகளில் 6 இடங்களில் பாதரசம் இருப்பது தெரிய வந்துள்ளது. பாதரசத்தின் அனுமதிக்கப்பட்ட அளவானது 0.001 mg/l என்கிற நிலையில் 6 இடங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில் பாதரசம் 0.0025 mg/l முதல் 0.0626 mg/l வரை கண்டறியப்பட்டுள்ளது. இது அனுமதிக்கப்பட்டதைவிட 2.5 முதல் 62 மடங்கு அதிகம் என்பதை, சுற்றுச்சூழலின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து போராடி வரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்புத் தோழர்கள் தங்களது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மருத்துவ குழு அமைக்க வேண்டும்
எனவே, நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், அபாயகரமான அளவுகளில் பாதரசம் கண்டறியப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களின் உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவக் குழுவை நியமித்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயரிய சிகிச்சை மேற்கொள்வதோடு, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
அடுத்து என்ன செய்ய வேண்டும்?
மேலும், மத்திய அரசின் பொருளாதார மேம்பாடு, வருவாய் பெருக்கம் ஆகியவற்றிற்காக, கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும், பொதுமக்களின் ஆரோக்கியமான வாழ்வியலையும் பலி கொடுப்பதை ஒருபோதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஏற்றுக்கொள்ளாது; பொறுத்துக்கொள்ளாது. ஆகவே, என்.எல்.சி நிறுவனத்தின் விரிவாக்கத்தை கைவிட்டு, நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் அதிகரித்திருக்கும் பாதரச மாசுப்பாட்டை குறைக்கவும், பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications