சட்டசபைல நீ என்னை திட்டு.. அப்பதான் காசு தருவாங்க.. காங். எம்.எல்.ஏவுக்கு அமைச்சர் நேரு தந்த ஐடியா!
சென்னை : வடிகால் அமைக்க கோரிக்க வைத்த காங்கிரஸ் எம்.எல்.ஏவிடம், "சட்டமன்றத்தில் நீ என்னை திட்டு. நான் பதில் சொல்றேன். அப்பதான் நிதி ஒதுக்குவாங்க" என அமைச்சர் கே.என்.நேரு ஐடியா கொடுத்தது சிரிப்பலையை ஏற்டுத்தியது.
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட சென்னை புறநகர் பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மழைநீர் தேங்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

கனமழையால் அவதி
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டின் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பணிகள் தீவிரம்
மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டு பொதுமக்களுக்கு கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதிகளில் பொதுமக்களை பாதிப்புகளில் இருந்து மீட்பதற்காகவும், மழை நீர் தேங்காமல் தவிர்ப்பதற்காகவும் அங்கு தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர். கால்வாய்கள் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

அமைச்சர்கள் ஆய்வு
இந்த பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து, பிரச்சனையின் தீவிரத்தை கேட்டறிந்து, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த பகுதிகளில் நடைபெற்று வரக்கூடிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்களையும் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார் அமைச்சர் கே.என்.நேரு.

அமைச்சர் பேச்சால் சிரிப்பலை
மாங்காடு பகுதியில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை, மழைநீரை தேங்காமல் தடுத்து ஆற்றில் கொண்டு போய்ச் சேர்க்க ஒரு கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேருவிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு அமைச்சர் கே.என்.நேரு கொடுத்த ஐடியா, அங்கிருந்தோர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

நீ என்னை திட்டு
"சட்டமன்றத்தில் நீ என்னை திட்டு. நான் பதில் சொல்றேன். அப்பதான் நிதி ஒதுக்குவாங்க.. நான் பார்த்துக்குறேன்" என அமைச்சர் கே.என்.நேரு, செல்வப்பெருந்தகையிடம் சிரித்தபடி ஐடியா கொடுத்தார். விரைவாக நிதி ஒதுக்கீடு பெறுவதற்காக தன்னையே திட்டச் சொல்லி அமைச்சர் கூறியதால் அங்கிருந்த அமைச்சர் அன்பரசன், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.












Click it and Unblock the Notifications