காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை! "பொங்கல் தொகுப்பில் கரும்பு” அதிமுக கூற்று பற்றி அமைச்சர் பதில்!
சென்னை : காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல, அதிமுக போராட்டத்தினால் கரும்பு வழங்கப்பட்டதாக அவர்கள் நினைத்தால் அதற்கு நாம் ஒன்று செய்யமுடியாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என ஈபிஎஸ் தரப்பினர் கூறி வரும் நிலையில், அமைச்சர் பெரியகருப்பன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பொங்கல் தொகுப்பில் முழுக் கரும்பு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பச்சரிசி, சர்க்கரை, ரூபாய் ஆயிரம் ரொக்கம் மற்றும் முழுக் கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்பால், தாங்கள் விளைவித்த கரும்புகளை நேரடியாக அரசிடம் விற்பனை செய்யலாம் என்பதால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் ஆண்டுதோறும் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படாதது விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து விவசாயிகள் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதேபோல் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்காததைக் கண்டித்தும், ரூ. 5000 வழங்கக் கோரியும் அதிமுக சார்பில் ஜனவரி 2ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

கரும்பு சேர்த்து வழங்கப்படும்
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பை சேர்த்து வழங்குவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசன நடத்தினார். அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், அர.சக்கரபாணி மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி பச்சரிசி, சர்க்கரை, ரூபாய் ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு கரும்பை சேர்த்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

எடப்பாடியாருக்கு கிடைத்த வெற்றி
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் மீண்டும் கரும்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும், விவசாயிகள் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என்ற அதிமுகவினர் கூறி வருகின்றனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பொங்கல் பரிசு தொகுப்பில் மீண்டும் முழுக்கரும்பு. இது அதிமுகவுக்கும், கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கும், விவசாயிகளின் போராட்டத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கரும்பைச் சேர்க்க அரசு உத்தரவிட்டதால், ஜனவரி 2ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் ஈபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

காக்கை உட்காரப் பனம்பழம்
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல, அதிமுக போராட்டத்தினால் கரும்பு வழங்கப்பட்டதாக அவர்கள் நினைத்தால் அதற்கு நாம் ஒன்று செய்யமுடியாது எனத் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசுடன் முழுக் கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார், அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்ததன் காரணமாக அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 9 முதல்
மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. பொங்கல் பரிசுத் தொகுப்போடு முழுக் கரும்பு வழங்கப்பட உள்ளதால், அதற்கான அவகாசம் தேவைப்படுகிறது. எனவே ஜனவரி 9ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். ஜனவரி 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதற்கான டோக்கன்கள் ஜனவரி 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படும் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications