உதயநிதி அமைச்சர் ஆவார்...! உறுதி அளித்த மூத்த அமைச்சர்
சென்னை: உண்மையாக, இயக்கத்திற்காக உழைக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் எனவும், அவர் அமைச்சரவையில் இடம் பெறுவார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுகவின் இளைஞரணி செயலாளராக உள்ளார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட உதயநிதி சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உதயநிதியின் ரசிகர் மன்ற நிர்வாகியும் பரம்பரை பரம்பரையாக கலைஞர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு பழக்கமான குடும்பத்தினராக இருந்த அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதயநிதி ஸ்டாலின் 234 தொகுதிகளையும் சொந்தம் கொண்டாடும் அளவுக்கு வர வேண்டும் என்றும், அவருக்கு உள்ள திறமைகளும் பயன்பட வேண்டும் என்பதால் அவரை அமைச்சராக வேண்டும் என கூறினார். தற்போது வரை பல கூட்டங்களில் அதனை பேசியும் வருகிறார்.

வலுக்கும் கோரிக்கை
அதே போல அமைச்சர் சிவசங்கர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்வில் பேசும்போது , ஸ்டாலின் வழியில் உதயநிதி ஸ்டாலின் செயல்படுவதாகவும், அவரை அமைச்சராக வேண்டுமென இரண்டாவது குரல் எழுப்பினார். திமுக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன், முதல்வருமான ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு
உண்மையாக, இயக்கத்திற்காக உழைக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் எனவும், அவர் அமைச்சரவையில் இடம் பெறுவார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை புனித பவுல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு 2000 ஏழை எளிய மக்களுக்கு பாய், போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் திருவிழாவில் நலத்திட்ட விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்கிறார் எனவும், ஜாதி,மதம், பேதம் கடந்து மனிதநேயம் மூலம் வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார்.

அமைச்சரவார் உதயநிதி
கழகத்திற்காக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை முதலமைச்சர் வழங்கக் கூடியவர், அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், இடைதேர்தல், கழக நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் என கலைஞர், முதலமைச்சர், போலவே உதயநிதி ஸ்டாலினும் மக்கள் பணியற்றி வருகிறார் எனக் கூறிய அமைச்சர் சேகர் பாபு, உதயநிதிக்கான அங்கீகாரம் கிடைக்கும், மேலும் மக்கள் பணி சிறப்பாக நடைபெற உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று தெரிவித்தார்.











Click it and Unblock the Notifications