"என்னோட அண்ணனை இழந்துட்டேன்.. 10 நாளைக்கு ஒருமுறை பேசிருவார்.." தழுதழுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
நடிகர் மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமாகப் பேசியுள்ளார்.
சென்னை : நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். "அண்ணன் மயில்சாமி, 10 நாட்களுக்கு ஒரு முறை தொலைபேசியில் அழைப்பார். ஆனால், ஒரு முறைகூட சொந்த விஷயத்திற்காக எந்த உதவி கேட்டதில்லை, நல்ல மனிதர்" என உதயநிதி ஸ்டாலின் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமிக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
மயில்சாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

மயில்சாமி மறைவு
நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1984ல் தாவணிக் கனவுகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மயில்சாமி நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானார். நகைச்சுவை நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், மிமிக்ரி ஆர்டிஸ்ட் எனப் பன்முகத்திறமை கொண்டவர் மயில்சாமி.

ரசிகர்கள் சோகம்
திரைத்துறையில் மட்டுமல்லாது சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார் மயில்சாமி. சென்னை வெள்ளத்தின் போது மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளார். அவரது மறைவு, தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பொதுமக்களும், திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

உதயநிதி நேரில் சென்று அஞ்சலி
தற்போது மயில்சாமியின் உடல் அஞ்சலிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பொதுமக்களும், சினிமா பிரபலங்களும், நண்பர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் மயில்சாமி உடலுக்கு நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

குடும்பத்தில் ஒருவர்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "மயில்சாமி அண்ணனின் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. திரையுலகம் மட்டுமல்ல அத்தனை பேருக்கும் மிகப்பெரிய இழப்பு. நகைச்சுவை நடிகர் என்பதை எல்லாம் தாண்டி மிகவும் நல்ல மனிதர். அவருடன் நிறைய பேசியுள்ளேன். எல்லோருடனும் மிகவும் பாசமாகப் பழகுவார். குடும்பத்தில் ஒருவர் மாதிரிதான் பேசுவார். கட்சி சார்பு இல்லாமல் பழகுபவர்.

சொந்த உதவி கேட்டதில்லை
10 நாட்களுக்கு ஒரு முறை தொலைபேசியில் அழைப்பார். ஆனால், ஒரு முறைகூட சொந்த விஷயத்திற்கு உதவி கேட்டதில்லை. பொதுநலனுடன் பேசக்கூடியவர். பொதுநலன் சார்ந்து என்னிடம் நிறைய விஷயங்கள் பேசுவார். அப்படிப்பட்ட நல்ல மனிதர். மிகப்பெரிய சோகத்தை அவரது இழப்பு ஏற்படுத்தியுள்ளது. 'பொதுவாக எம்மனசு தங்கம்', 'நெஞ்சுக்கு நீதி' ஆகிய படங்களில் என்னுடன் நடித்தார். 50 நாட்கள் படப்பிடிப்பு என்றால் 40 நாட்கள் என்னுடனே தான் இருந்தார். எனக்கு அண்ணன் மாதிரி தான். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என உருக்கமாகத் தெரிவித்தார்.

அண்ணன் மயில்சாமி
முன்னதாக மயில்சாமியின் மறைவு குறித்து தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "அண்ணன் மயில்சாமி அவர்கள் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. சிறந்த குணச்சித்திர நடிகர், எளிய மனிதர்கள் மீது பேரன்பு கொண்டவர். ரசிகர்களின் அன்பைப் பெற்ற அண்ணன் என்றென்றும் நினைவுகூரப்படுவார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications