Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின்
சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழகம் முழுவதும் வீடுகளிலும் பொது இடங்களிலும் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உயரட்டும் கருப்புக்கொடி!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?
ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் "மாபெரும் வரலாற்று அநீதி"!
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.!
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.
தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!
தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அது போல் இன்னொரு ட்வீட்டில் Delimitation இந்திய அரசியலையே மாற்றியமைக்கவுள்ள பேராபத்து! என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் கடந்த பல தசாப்தங்களாக மத்திய அரசின் அறிவுறுத்தல்களை ஏற்று, மக்கள் தொகை கட்டுப்பாட்டு முறைகளை மிகச் சிறப்பாக அமல்படுத்தி வருகின்றன.
இப்போது தொகுதி மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் அமைந்தால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத வடமாநிலங்களுக்கு நாடாளுமன்ற இடங்கள் அதிகமாகும்.
கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைபிடித்த தமிழகத்திற்கு இடங்களின் விகிதாச்சாரம் குறையும். இதை முதல்வர் ஸ்டாலின் "சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்குத் தரப்படும் தண்டனை" என்று கடுமையாக விமர்சிக்கிறார்.
புதிய கணக்கீட்டின்படி, நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் (உதாரணமாக 543-லிருந்து 850 வரை) அதிகரிக்கப்பட்டாலும், அதில் தென்மாநிலங்களின் பங்களிப்பு குறையும்.
இதனால் மத்திய அரசைத் தீர்மானிக்கும் சக்தி சில பெரிய வடமாநிலங்களிடம் மட்டுமே சென்றுவிடும்.
தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்களின் அரசியல் குரல் டெல்லியில் வலுவிழந்துவிடும் என்ற அச்சத்தை அவர் முன்வைக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் வெறும் எதிர்ப்பை மட்டும் காட்டாமல், ஒரு தீர்வாக 'ஹைப்ரிட் மாடல்' முறையைப் பரிந்துரைக்கிறார். தொகுதிகளைப் பிரிக்கும்போது வெறும் மக்கள் தொகையை மட்டும் பார்க்காமல், ஒரு மாநிலத்தின் பொருளாதாரப் பங்களிப்பு (GSDP) மற்றும் வளர்ச்சிக் குறியீடுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்கிறார்.
உயரட்டும் கருப்புக்கொடி!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 15, 2026
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?
ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும்,… pic.twitter.com/6gbEAHvNn4
நிதிப் பங்களிப்பில் முன்னணியில் இருக்கும் தமிழகத்திற்கு அரசியல் அதிகாரத்திலும் சரியான பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதே அவர் வாதமாகும்.
இந்த மறுவரையறையால் உத்தரப்பிரதேசத்திற்கு 140 சீட்களும், பீகாருக்கு 73 லோக்சபா சீட்களும் ராஜஸ்தானுக்கு 48, மத்திய பிரதேசத்திற்கு 51 சீட்களும். மகாராஷ்டிராவிற்கு 79 சீட்களும் கிடைக்கும். அதிக சீட் கிடைக்கும் மாநிலங்களில் இவர்கள்தான் டாப்!
அது போல் தமிழகத்தில் 39 ஆக இருந்த லோக்சபா சீட்கள் தொகுதி மறுவரையறையால் 51 ஆக மாறும். கேரளாவுக்கு 23 ஆகவும் ஆந்திரா+ தெலுங்கானாவுக்கு 59 ஆகவும் ஒடிஸாவுக்கு 29 ஆகவும் மேற்கு வங்கத்திற்கு 64 ஆகவும் மாறும். அதிக பாதிப்புகளை சந்திக்கும் டாப் மாநிலங்கள் இவைகள் ஆகும்.












Click it and Unblock the Notifications