சென்னையில் சுட்டெரிக்கும் வெயில்..5 நாட்களுக்கு மிதமான மழை..இதமான வானிலை அறிவிப்பு
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 13ஆம் தேதி வரைக்கும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக கடந்த மே மாத இறுதியில் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. சில ஊர்களில் மழை பெய்தாலும் பல ஊர்களில் அக்னி நட்சத்திர காலம் போல வெயில் சுட்டெரிக்கிறது.
சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருத்தணி, மதுரை விமான நிலையம், கடலூரில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், மதுரையிலும், கரூர் பரமத்தியிலும் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

மழை எவ்வளவு
கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலும் நீலகிரி மாவட்டம் சாம்ராஜ் எஸ்டேட் பகுதியிலும் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. பொன்னமராவதி, தேவாலா, எமரால்ட், செறுமுள்ளி, வூட்பிரையர் எஸ்டேட், காரியாபட்டியில் தலா 2 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. கூடலூர், விருதுநகர், கேத்தாண்டபட்டியில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

5 நாட்களுக்கு மிதமான மழை
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 09.06.2022, 10.06.2022, 11.06.2022,12.06.2022, 13.06.2022 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வெயில் சுடும்
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றைய தினம் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளைய தினம் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும், கர்நாடக கடலோரப் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரைக்கும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும், வட கேரளா - கர்நாடக கடலோரப்பகுதி மற்றும் இலட்சத்தீவு பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications