பிரியங்காவுக்காக சிறையில் விரதம் கூட இருந்தேன்.. ஷி இஸ் ரியல் ஏஞ்சல்.. சென்னையில் நளினி நெகிழ்ச்சி
சென்னை: பிரியங்கா காந்தி என்னை சிறையில் வந்து சந்தித்த போது அவர் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என சிறையில் நான் விரதம் கூட இருந்தேன் என நளினி நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ரவிசந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேரும் தங்களது தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அண்மையில்தான் பேரறிவாளன் விடுதலைச் செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டதன் அடிப்படையில் மற்ற 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

நளினி
இதையடுத்து நேற்றைய தினம் நளினி சிறையிலிருந்து வெளியே வந்தார். இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சிறையில் சொல்லொண்ணா துயரத்தை அடைந்தேன். எங்களை தினமும் பூட்டிதான் வைப்பார்கள். நான் கர்ப்பிணியாக இருந்தேன்.

சிறையில் கதவுகள்
என்னை சிறையில் கதவுகளை திறக்காமல் இருந்ததால் மருத்துவர்கள் கோபமடைந்து இந்த பெண்ணுக்கு நாங்கள் பிரசவம் பார்க்க மாட்டோம் என்றார். அந்த பெண் வாக்கிங் செல்ல வேண்டும், கூட்டி பெருக்க வேண்டும், இப்படியெல்லாம் செய்தால்தான் அவருக்கு சுகபிரசவம் நடக்கும். நீங்கள் எந்நேரமும் பூட்டி வைத்திருந்தால் எப்படி என மருத்துவர்கள் கோபித்து கொண்டதால் என்னை சிறையில் கொஞ்ச நாட்களுக்கு திறந்து வைத்திருந்தார்கள்.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி குடும்பத்தினர் விரும்பினால் அவர்களை சந்திப்பேன். தனது தந்தையை இழந்துள்ளனர். அந்த வலி அவர்களுக்கு இருக்கும். பிரியங்கா என்னை சிறையில் பார்த்த போது அவருடைய தந்தை இறப்பு குறித்து கேட்டார். என்னை சிறையில் உட்கார சொன்னார். இதுவரை என்னை நிற்க வைத்தே பேசிய நிலையில் அவர் என்னை உட்கார சொன்னது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. நான் உட்கார்ந்தால்தான் அவர் உட்காருவேன் என பிடிவாதமாக இருந்தார். பின்னர் இருவரும் அழுதுவிட்டோம். என்னிடம் ஒரு தேவதையை போல் நடந்து கொண்டார். எனக்கு இதெல்லாம் அப்போது கனவு போல் இருந்தது. அவர் கையை கிள்ளி பார்த்தேன். மேலும் சில தனிப்பட்ட விஷயங்களை என்னிடம் பகிர்ந்தார். அதையெல்லாம் பொதுவெளியில் சொல்ல முடியாது. அவர் சிறையில் என்னை சந்தித்துவிட்டு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதற்காக நான் சிறையில் விரதம் இருந்தேன்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலினை பேரறிவாளன் சந்தித்ததால் சிக்கல் ஏற்பட்டது. எனவே என்னால் முதல்வரை யாரும் சிக்கலில் சிக்க வைத்துவிடக் கூடாது என்பதுதான் என் தயக்கம். இருந்தாலும் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் நடந்த போது நான் அந்த இடத்திலேயே இல்லை. இந்திரா காந்தி சிலை அருகே நின்று கொண்டிருந்தேன். அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன். இது போல் ஒரு சம்பவம் நடைபெறும் என்றும் எனக்கு முன்கூட்டியே தெரியாது. அது போல் என்னை பற்றி சாட்சி சொல்ல வந்த எஸ் ஐ அனுசுயா என்னை பார்த்ததே இல்லை என பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

7 தமிழர்கள் விடுதலை
7 தமிழர்கள் விடுதலை குறித்து பேசும் போதெல்லாம் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி அனுசுயா எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த குண்டு வெடிப்பால் தனது விரல்களை இழந்துவிட்டதாகவும் நிறைய காவல் துறை அதிகாரிகளை இழந்துவிட்டதாகவும் இதனால் அவர்களை வெளியேவிடக் கூடாது என்றும் அனுசுயா எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மேலும் பேரறிவாளன் முதல்வரை போய் சந்தித்த போது அவரை ஆரத்தழுவி முதல்வர் வரவேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பாஜக, காங்கிரஸ் ஆகியோர் சிறையில் தண்டனை அனுபவித்தவரை முதல்வர் ஆரத்தழுநவி வரவேற்கிறாரே என்றார்கள். இந்த விமர்சனங்களால் முதல்வரை பார்த்தால் அவருக்கு சிக்கல் ஏற்படுமோ என்ற தயக்கம்தான் காரணம் என நளினி சொல்கிறார்.












Click it and Unblock the Notifications