உள்ளாட்சி தேர்தல்.. நாம் தமிழர் கட்சி யாருடன் கூட்டணி? சீமான் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என் உயிர்க்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

கடந்த சட்டமன்ற தேர்தல் 2021, நமக்கு அளப்பரிய நம்பிக்கைகளை வழங்கிய தேர்தலாக அமைந்தது. பெரிய பொருளாதார வசதிகள், குடும்பப் பின்புலம் இன்றி, சாதி-மத உணர்வைச் சாகடித்து, நாம் தமிழர் என்று ஒன்றுதிரண்டு நம் தேசிய இனத்தின் அரசியல் விடுதலைக்காக நேர்மையோடும் நெஞ்சூறுதியோடும் நாம் சிந்திய கடின உழைப்பு ஒருபோதும் வீண்போகாது.

அடித்தளம் வலிமை

அடித்தளம் வலிமை

"எப்போதும் வெற்றிக்கான அடித்தளம் உழைப்பின் வியர்வையில் இருக்கிறது" என்கிறார் பேரறிஞர் வால்டேர். எதனாலும் ஒப்பிட முடியாத ஈடுஇணையற்ற உழைப்பினை வழங்கி நாம் தமிழர் என்கின்ற மாபெரும் அரசியல் அமைப்பினையும், நமது எண்ணத்திற்கு ஏற்ப கிடைத்திட்ட சின்னமான விவசாயி சின்னத்தையும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய்ச் சேர்த்து, நமது வெற்றிக்கான அடித்தளத்தை மிகவும் வலிமையாக அமைத்துள்ளோம்.

 50 விழுக்காடு பெண்கள்

50 விழுக்காடு பெண்கள்

ஆணுக்குப் பெண் சமம் அல்ல, ஆணும் பெண்ணும் சமம் என்பதை உலகத்திற்குக் காட்ட இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 50 விழுக்காடு பெண்களை வேட்பாளர்களாக நிறுத்திய சாதனையை நாம் நிகழ்த்தி இருக்கிறோம். பொதுத் தொகுதியில் ஆதி தமிழருக்கு இடம், இஸ்லாமிய தமிழர்களுக்கு மற்ற எல்லாக் கட்சிகளைக் காட்டிலும் அதிக வாய்ப்புகள், தமிழர் நிலத்தில் காலம் காலமாய்ப் புறக்கணிக்கப்பட்ட பல எளிய சமூகங்களுக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு என இதுவரை ஆண்ட, ஆள்கின்ற கட்சியினர் எவரும் செய்யத் துணியாத புரட்சிகரச் செயல்களைக் கடந்த சட்டமன்றத்தேர்தலில் நாம் துணிந்து செய்திருக்கிறோம்.

உண்மையான மாற்று அரசியல்

உண்மையான மாற்று அரசியல்

'அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையும்; அதை நிறைவு செய்யும் சேவையும் தான்' என்பதனை உணர்ந்து, 60 ஆண்டுக் கால அரசியல் சீரழிவை பற்றிப் பேசியும், காடு, மலை, அருவி, ஆறு, ஏரி உள்ளிட்ட இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதையும், இந்நிலத்தின் கனிம வளங்கள் யாவும் கொள்ளையடிக்கப்படுவதையும், அதனால் ஏற்படவிருக்கும் சூழலியல் பேரழிவுகள் குறித்தும் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்து, உண்மையான மாற்று அரசியல் என்றால் என்ன என்பதனை மக்களின் மனதில் பதிகிற அளவு உரத்த குரலில் முழங்கி, நாம் ஆற்றிய அரசியல் பணிகள் தமிழ்த்தேசிய இன விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

 நேர்மைதான் காரணம்

நேர்மைதான் காரணம்

அதிகாரமும் பொருளாதாரமும் உடைய 50 ஆண்டுகாலக் கட்டமைப்புகளைக் கொண்டிருக்கின்ற திராவிட, தேசியக் கட்சிகளைப் போன்று வாக்குக்குப் பணம் கொடுக்காமலேயே, அவர்களுக்கு எதிராக 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட எளிய வாக்காளர்களின் விலைமதிப்பற்ற வாக்குகளை நமக்குப் பெற்றுத் தந்திருப்பது பணம், பதவி, புகழ், அதிகாரம் என எதற்கும் உடன்படாத நமது நேர்மையும் போர்க்குணமும் தான் என்றால் மிகையல்ல.

தனித்து களமிறங்குவோம்

தனித்து களமிறங்குவோம்

இந்நிலையில், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்குட்பட்ட ஊரக உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு, வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வழமைபோல மக்களையும், உன்னதமான தத்துவத்தையும் நம்பி தனித்துக் களமிறங்கியுள்ளது நாம் தமிழர் கட்சி.

போட்டியிடாத இடங்களே இல்லை

போட்டியிடாத இடங்களே இல்லை

இத்தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே மாநில, மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களுடன் மாவட்டவாரியாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டங்களில் தேர்தல் குறித்தும் அதற்கான களப்பணிகள் குறித்தும் திட்டமிடல் செய்தது தேர்தலைச் சிறப்பாக எதிர்கொள்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. கலந்தாய்வுக் கூட்டங்களில் எட்டப்பட்ட முடிவுகளின் படி, போட்டியிடாத இடங்களே இல்லை என்று சொல்லும் வகையில் அனைத்து உள்ளாட்சி இடங்களுக்குமான வேட்பாளர்கள் தேர்வை உடனடியாக இறுதி செய்து, அனைவரின் வேட்புமனுக்களையும் உரிய முறையில் விரைந்து பதிவு செய்யச் செய்யவேண்டும் என மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களை அறிவுறுத்துகிறேன்.

தேக்கநிலை

தேக்கநிலை

எவ்விதத் தத்துவத் தடம்பிறழ்வோ, கொள்கை சறுக்கலோ, அரசியல் உடன்பாடு எதுவுமற்று நன்னெறியோடு நேர்மையான பாதையில் நாம் தமிழர் கட்சி பயணித்தாலும் எப்போதும் பொருளாதார நெருக்கடியே நமது செயற்பாட்டை மட்டுப்படுத்துகிறது. வளர்ச்சியில் ஒரு தேக்கநிலையை உருவாக்குகிறது. பொருளாதாரப் பலமும், ஊடக வெளிச்சமும் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால் நாம் அடைந்திருக்கிற வளர்ச்சியைவிடப் பன்மடங்கு வளர்ச்சியை அடைந்திருப்போம் என்பது எவராலும் மறுக்கவியலா உண்மை.

உறுதுணையாக நிற்க வேண்டும்

உறுதுணையாக நிற்க வேண்டும்

எனவே, ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக்கான வாகன எரிபொருள், உணவு, தேர்தல் பணிமனை, மேடை ஏற்பாடு, ஒலிவாங்கி, ஒலிப்பெருக்கி போன்ற இன்றியமையாச் செலவுகளுக்கு, பொருளாதாரப் பலம் படைத்த இனமானத்தமிழர்களும், மாற்று அரசியலை விரும்பி நிற்கும் சனநாயகவாதிகளும் தங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என உள்ளன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

பரப்புரை

பரப்புரை

மேலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்ற மாவட்டங்களைத் தவிர்த்து இதர மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் அனைவரும், தங்கள் அருகாமையில் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரையில் ஈடுபடுமாறும், களத்தில் நேரடியாகப் பங்கேற்க முடியாத உறவுகள் தங்களால் இயன்ற நிதியுதவி அல்லது பொருளுதவி வழங்கி களத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வலிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விவசாயி

விவசாயி

கடுமையான நோய்த்தொற்று பரவிவரும் இக்காலக் கட்டத்தில், நாம் தமிழர் உறவுகள் அனைவரும் தனிநபர் இடைவெளி, முகக்கவசம், கையுறை அணிதல், கிருமி போக்கிகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, மிகுந்த கவனத்தோடு தேர்தல் களப்பணியாற்றுமாறு கோருகிறேன்.


உழவு இல்லையேல்; உணவு இல்லை!
உணவு இல்லையேல்; உயிர்கள் இல்லை!
உயிர்கள் இல்லையேல்; உலகு இல்லை!
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் "விவசாயி"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+