30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. இருகட்சிகள் இடையே இன்னும் தொகுதி பங்கீடு முடியவில்லை. இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையே அதிமுக கூட்டணியில் பாஜக குறைந்தபட்சம் 30 - 35 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் தொகுதிகளை எப்படி பாஜக தேர்வு செய்துள்ளது? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் பாஜகவின் கணக்கிற்கு எடப்பாடி பழனிச்சாமி 'ஓகே' சொல்வாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 30ம் தேதி தொடங்குகிறது. இன்னும் வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் அதிமுக - பாஜக இடையே தொகுதி பங்கீடு இன்னும் நடக்கவில்லை.

நேற்று முன்தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு கூட்டணியில் உள்ள பாமக அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோர் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினர்.
பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்?
அமித்ஷா சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், ''இன்னும் 4 நாட்களில் தொகுதி பங்கீடு முடிக்கப்படும். பியூஷ் கோயல் தமிழகம் வருகிறார். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கட்சிகளுடன் பேசி பிரித்து கொள்வோம்'' என்றார். அதன்படி பியூஷ் கோயல் இன்று தமிழகம் வருகை தர உள்ளார். அவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய உள்ளார்.
இதற்கிடையே தான் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக எவ்வளவு தொகுதிகளை எதிர்பார்க்கிறது? பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் பாஜக குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35 தொகுதிகளில் போட்டியிட தயாராகி வருகிறதாம்.
எந்தெந்த மண்டலங்கள் குறி
பாஜகவை எடுத்து கொண்டால் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள், சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் தங்களுக்கு செல்வாக்கு உள்ளதாக நினைக்கிறது. இதனால் தென்மாவட்டங்கள், சென்னை, கோவையில் இருந்து கூடுதல் தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து வாங்க பாஜக திட்டமிட்டுள்ளது.
இதில் கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக உள்ளது. இதனால் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக விரும்பும் தொகுதிகளை அதிமுக வழங்க வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது. அதேபோல் சென்னை திமுக கோட்டையாக உள்ளது. இருப்பினும் பாஜக கேட்கும் அனைத்து தொகுதிகளையும் அதிமுக விட்டு கொடுக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
தென்மாவட்டங்கள் டார்க்கெட்
அதேவேளையில், தென்மாவட்டங்களில் பாஜக கூடுதல் சீட்டுகளை குறிவைக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியும் அதிக தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியுடன் நேரடியாக மோதும் வகையில் தொகுதிகளை பாஜக கோர திட்டமிட்டுள்ளது.
75 தொகுதிகளின் பட்டியல்
அதன்படி பாஜக சுமார் 75 தொகுதிகளை தங்களுக்கு சாதகமான இடங்களாக அடையாளம் கண்டுள்ளது. இதில் இருந்து தான் பாஜகவுக்கு குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சமாக 35 தொகுதிகள் வரை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் கடந்த 2024 லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் எந்தெந்த தொகுதிகளில் அதிக ஓட்டுகளை பெற்றனர் என்ற டேட்டாவை வைத்து அந்தந்த லோக்சபா தொகுதிகளுக்குள் வரும் ஒரு சட்டசபை தொகுதிகளையும் எப்படியாவது அதிமுகவிடம் பேசி வாங்க பாஜக திட்டமிட்டுள்ளது.
பாஜகவின் நம்பிக்கை
பாஜகவை எடுத்து கொண்டால் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேவேளையில் 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி பிரிந்தது. பாஜக தலைமையிலான கூட்டணி தமிழகம் 39 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இருப்பினும் இந்த கூட்டணி 18.27 சதவீத ஓட்டுகளை வாங்கியது. இதனால் இந்த முறை அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைந்துள்ளதால் நிச்சயம் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொடும் என 'தாமரை' கட்சி மேலிடம் நம்பிக்கையாக செயல்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications