சமூக நீதி தத்துவத்திற்கு நேர் முரணானது.. 10% இடஒதுக்கீட்டில் சீராய்வு மனு அவசியம்.. கி.வீரமணி கருத்து!
சென்னை: உயர் ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பை எதிர்ப்பு சீராய்வு மனு தாக்கல் செய்வது அவசியம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்
உயர் ஜாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் 2019ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அவசர சட்டமாக கொண்டுவந்தது. இது பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டது.
உயர் ஜாதி ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

10% இடஒதுக்கீடு செல்லும்
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, உயர் வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் பொருளாதார ரீதியாக 10 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும், நீதிபத் லலித் மற்றும் ரவீந்திர பட் எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

கீ.வீரமணி அறிக்கை
இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர் ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு செல்லும் என்று இன்று ஓய்வுபெறும் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் உள்ள அரசியல் அமர்வு அளித்துள்ள, 103ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் செல்லும் என்ற பெரும்பான்மைத் தீர்ப்பு என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமான சமூக நீதித் தத்துவத்திற்கு நேர் முரணானது.

சமூக அநீதி
இந்தப் பொருளாதார அடிப்படையில் அது செல்லாது என்ற மண்டல் குழு தொடர்பான 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலிருந்து தப்பிக்கவே, 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தமே - அடிக்கட்டுமானத்திற்கு விரோதமானதாகும் என்பதால், இது ஒடுக்கப்பட்ட பசியேப்பக்காரனை வெளியே தள்ளி, புளியேப்பக்காரனான முன்னேறிய ஜாதி ஏழைகளை உள்ளே விருந்துக்கு அனுப்பும் சமூக அநீதியாகும்.

சீராய்வு மனு அவசியம்
இதனை நியாயப்படுத்திட எந்தப் புள்ளி விவரமும், ஆதாரமும் கிடையாது. இதன்மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டியது அவசியம், அவசரம் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications