கி.பி 14-15ம் நூற்றாண்டில் சோழர்கள் தமிழ்நாட்டை ஆண்டனரா? மத்திய அரசின் செய்தி குறிப்பால் சர்ச்சை!
சென்னை: தமிழ்நாட்டில் கிபி 14-15-ம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சி செய்ததாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் இடம்பெற்றிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டியர்கள் பன்னெடுங்காலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தனர். சேரர்களைத் தொடர்ந்து சோழர்கள், அவர்களையடுத்து பாண்டியர்கள் என தமிழ் மன்னர்கள் அரசுகள் அழிந்து போயின. பிற்கால சோழர்கள் கிபி 850 தொடங்கி 1279 வரையில் நிலைத்திருந்தனர். பாண்டியர்களும் இதே கால கட்டம் வரை அரசாட்சி செலுத்தினர். தமிழ்நாட்டில் கிபி14-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மதுரை மீதான மாலிக்காபூர் படையெடுப்பு நிகழ்ந்துவிட்டது. தென்காசிப் பாண்டியர்கள் கிபி 17-ம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தனர். பின்னர் கிபி 1300 முதல் 1700 நடுப்பகுதி வரை விஜயநகரப் பேரரசு தமிழ்நாட்டில் நிலைத்தது. இதுதான் தமிழ்நாட்டில் சுருக்கமான வரலாறு.

ஆனால் மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கிபி 14-15-ம் நூற்றாண்டில் சோழர் காலம் ஆட்சியில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் காலத்தைச் சேர்ந்த பகவான் ஹனுமன் சிலை மீட்கப்பட்டு, அது தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் பொட்டவெளி வெள்ளூர் ஸ்ரீவரதராஜ பெருமாள் விஷ்ணு ஆலயத்திலிருந்து பகவான் ஹனுமன் சிலை கடத்தப்பட்டது. அந்த சிலை 14-15-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சோழர் காலத்தைச் சேர்ந்த சிலையாகும். இது 1961-ம் ஆண்டு புதுச்சேரி பிரான்ஸ் நிறுவனத்தின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டது. 2012-ம் ஆண்டு கடத்தப்பட்ட இந்த சிலை, ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டு கேன்பராவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 2023 பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் அந்த சிலை இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு, அது 18.04.2023 அன்று வழக்கு சொத்தாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மத்திய அரசு நாட்டின் பழங்கால பாரம்பரியத்தை பாதுகாக்கவும், கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய சின்னங்களை மீட்கவும் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது வரை மொத்தம் 251 பழங்கால பாரம்பரிய சின்னங்கள் மற்றும் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது வரை 238 சிலைகளும், பாரம்பரிய சின்னனங்களும் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த செய்திக் குறிப்பில் "14-15-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சோழர் காலத்தைச் சேர்ந்த சிலை" என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்போது தமிழ்நாட்டில் சுல்தானியர்கள், அடுத்ததாக விஜயநகரப் பேரரசு ஆட்சி காலம்தான் இருந்தது. கிபி14,15-ம் நூற்றாண்டில் சோழர்கள் அரசு என்பதே இல்லை என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.












Click it and Unblock the Notifications