கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு குட்நியூஸ். மாறப்போகுது மதிப்பெண் முறை!
கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு புதிய மதிப்பெண் முறை வரும் கல்வியாண்டில் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: கலை, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு புதிய மதிப்பெண் முறை கொண்டுவரப்பட உள்ளதாகவும் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க உயர்கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் செய்து வருகிறது.
தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள 50 இளங்கலை, 75 முதுகலை என மொத்தம் 127 பாடத் திட்டங்களுக்கான புதிய மாதிரி பாடத்திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

மாணவர்கள் மாறலாம்
புதிய மாதிரி பாடத்திட்டம் எப்படி புதுப்பிக்கப்படுகிறது: தொழில்துறை உள்ளீடுகள், பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்கள், நான் முதல்வன் திட்டம் ஆகியவற்றை அடிப்படையில் பாடங்கள் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. புதிய மாதிரி பாடத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் இதேபோன்ற பாடத்திட்டத்தை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து மற்றொரு பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் செல்வதற்கு வசதியாக இருக்கும் என்றும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள் மற்றும் மென் திறன்களுடன் புதிய மாதிரி பாடத்திட்டம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

தமிழ் ஆங்கிலம்
தற்போது இளங்கலை படிப்புகளுக்கான மாதிரி பாடத்திட்டத்தில் பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளுக்கு ஏற்கனவே முதல் 2 செமஸ்டர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இருக்கிறது. தற்போது 3 மற்றும் 4-வது செமஸ்டர்களிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த மாதிரி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான புதிய மதிப்பெண் முறையும் கொண்டுவரப்படும் என்றும் உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அகமதிப்பீடு 25 சதவீதம்
உயர்கல்வித்துறை வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின் படி, தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு 75 சதவீத மதிப்பெண்களுக்கு செமஸ்டர் தேர்வும், 25 சதவீத மதிப்பெண்களுக்கு அகமதிப்பீடு தேர்வும் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாம். அதாவது, 75:25 என்ற விகிதத்தில் மதிப்பெண் முறை கொண்டு வரப்படலாம் என்கிறார்கள். தற்போது தன்னாட்சி கல்லூரிகளில் 50:50, 60:40 என்ற விகிதத்தில் மதிப்பெண் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

அடுத்த ஆண்டு அமல்
இந்நிலையில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சிலால் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய மதிப்பெண் நடைமுறை, பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு, பல்கலைக்கழக துணைவேந்தர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மதிப்பெண் முறை அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகள், இணைப்பு மற்றும் இணைப்பில் இல்லாத கல்லூரிகளில் மாணவர்களின் மதிப்பீட்டில் சீரான தன்மையை கொண்டு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய மதிப்பெண் முறை அடுத்த கல்வியாண்டில் (2023-24) அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications