புதிய வாடகை சட்டம் 2026! எப்போது அமலுக்கு வந்தது? வாடகைதாரர்கள் அறிய வேண்டிய 5 முக்கிய விதிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக "புதிய வாடகை விதிகள் 2026" என்ற பெயரில் ஒரு செய்தி, சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. வாடகைதாரர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் சாதகமாக மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துவிட்டது என்றும், இனிமேல் யாரும் இஷ்டத்திற்கு வாடகை ஏற்றிவிட முடியாது என்றும் பல தகவல்கள் வாட்ஸ்அப், லிங்க்டுஇன் போன்ற பக்கங்களில் மீண்டும் உலா வருகின்றன. ஆனால் இதன் உண்மைத்தன்மை? வாடகை விதிகள் என்ன சொல்கின்றன? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

2026ம் ஆண்டில் மத்திய அரசு எந்தவிதமான புதிய வாடகைச் சட்டத்தையும் திடீரென நிறைவேற்றவில்லை. இப்போது வைரலாகி கொண்டிருக்கும் இந்த விதிகள் அனைத்தும், கடந்த 2021ம் ஆண்டே மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட "மாதிரி வாடகைச் சட்டம்" (Model Tenancy Act 2021) என்பதில் உள்ள விவரங்கள் தான். மத்திய அரசு இதை ஒரு வழிகாட்டியாக மட்டுமே மாநில அரசுகளுக்கு வழங்கியது.

new rent rules model tenancy act 2026 rental regulations India tenant rights house rent rules 2026

புதிய வாடகைச் சட்டம்

இந்தியாவில் சட்டம்-ஒழுங்கு மற்றும் வீட்டுவசதித் துறை என்பது மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வருவதால், ஒவ்வொரு மாநிலமும் இந்த விதிகளைத் தங்கள் விருப்பப்படி மாற்றி அமைத்தோ அல்லது அப்படியே ஏற்றுக்கொண்டோ தான் சட்டமாக்க முடியும். அதனால் இது நாடு முழுவதும் ஒரே நாளில் அமலுக்கு வந்த புதிய சட்டம் அல்ல என்பதே முதல் உண்மை.

இருந்தாலும் இந்த மாதிரி சட்டத்தின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்கள் இப்போது எடுத்து வரும் புதிய முன்னெடுப்புகள் என்ன, சமூக வலைத்தளங்களில் பேசப்படும் அந்த முக்கிய விதிகள் எவை என்பதை அனைவரும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள்

முதலாவதாக அட்வான்ஸ் வாங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வீட்டு உரிமையாளர்கள் 6 மாதங்கள் முதல் 10 மாதங்கள் வரையிலான வாடகைத் தொகையை முன்பணமாகக் கேட்பது வழக்கம்.

ஆனால் புதிய விதியின்படி குடியிருப்பு வீடுகளுக்கு அதிகபட்சமாக 2 மாத வாடகைத் தொகையை மட்டுமே முன்பணமாக வாங்க வேண்டும். வணிக நோக்கிலான கடைகள் அல்லது அலுவலகங்களுக்கு 6 மாத வாடகை வரை முன்பணமாகப் பெறலாம். வாடகைதாரர் வீட்டை காலி செய்யும்போது, தேய்மானக் கட்டணங்கள் தவிர்த்து மீதித் தொகையை நியாயமான முறையில் திருப்பித் தர வேண்டும்.

அட்வான்ஸ், வாடகை ஒப்பந்தம்

2வதாக, வாய்மொழி ஒப்பந்தங்களுக்கு இனிமேல் சட்டப்பூர்வ மதிப்பு கிடையாது. வீட்டு உரிமையாளரும் வாடகைதாரரும் கண்டிப்பாக எழுத்துப்பூர்வமாக வாடகை ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அந்த ஒப்பந்தத்தை, கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் உள்ளூர் வாடகை அதிகார அமைப்பில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதற்கென டிஜிட்டல் தளங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

3வதாக, வாடகை உயர்வு மற்றும் தனியுரிமை விதிகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர்கள் தங்களுக்கு தோன்றும் போதெல்லாம் வாடகையை உயர்த்த முடியாது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். அதுவும் வாடகையை உயர்த்துவதற்கு 90 நாட்களுக்கு முன்பே வாடகைதாரருக்கு எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.


வாடகைதாரர்கள் - வீடு பராமரிப்பு

அதேபோல, "வீடு என்னுடையது" என்பதற்காக வீட்டு உரிமையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் வாடகை வீட்டுக்குள் நுழைந்துவிட முடியாது. அவசர காலங்களை தவிர்த்து, வீட்டை பார்வையிடவோ அல்லது பழுதுபார்க்கவோ வர வேண்டுமென்றால், 24 மணி நேரத்திற்கு முன்பே வாடகைதாரருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அதுவும் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனத்திற்கு இடைப்பட்ட பகல் பொழுதில் மட்டுமே வர வேண்டும்.

4வதாக, வீட்டை காலி செய்வதிலும், பராமரிப்பதிலும் உள்ள விதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. வாடகைதாரர் தொடர்ந்து 2 மாதங்கள் வாடகை தராவிட்டால் வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தை நாடலாம். ஒப்பந்தக் காலம் முடிந்த பிறகும் வீட்டை காலி செய்ய மறுத்தால், முதல் 2 மாதங்களுக்கு இரட்டிப்பு வாடகையும், அதற்கடுத்த மாதங்களில் நான்கு மடங்கு வாடகையும் அபராதமாக விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு வாடகை நீதிமன்றங்கள்

அதேசமயம் வீட்டின் கட்டமைப்பு சார்ந்த பெரிய பழுதுகளை (பைப் வெடிப்பு, சுவர்களில் நீர்க்கசிவு) வீட்டு உரிமையாளர் தான் சரி செய்ய வேண்டும். சிறு பழுதுகளை வாடகைதாரர் பார்த்துக்கொள்ள வேண்டும்.

5வதாக, வழக்குகளை விரைந்து முடிக்க Rent Tribunals என்று சொல்லக்கூடிய சிறப்பு வாடகை நீதிமன்றங்கள் அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வழக்கமான சிவில் நீதிமன்றங்கள் போல வருட கணக்கில் இழுத்தடிக்காமல் 60 நாட்களுக்குள் வாடகைத் தகராறுகளுக்குத் தீர்வு காண முடியும். சுருக்கமாக சொன்னால், இந்த விதிகள் அனைத்தும் வாடகைச் சந்தையை முறைப்படுத்த கொண்டு வரப்பட்ட வழிகாட்டுதல்களே தவிர, 2026ல் வந்த அதிரடி சட்டம் கிடையாது என்று அறிவுறுத்துகிறார்கள் சட்ட நிபுணர்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+