பட்டினப்பாக்கத்தை விட்டுடலாம்! ஜெயலலிதா கனவு கண்ட திருவிடந்தைக்கு போலாம்! மாற்றி யோசித்த விஜய்?
சென்னை: சென்னை பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தையில் கட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
சென்னையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடப்பற்றாக்குறையால் சில அரசு துறைகள் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இயங்கி வருகிறது. ஒட்டுமொத்த அரசு துறையும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் 1200 கோடியில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

அதன்படி இதற்கான இடம் பட்டினப்பாக்கம் என கண்டறியப்பட்டது. அந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இதற்கு மீனவ மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் மீனவர்களின் குடியிருப்புகளை காலி செய்துவிட்டு புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. புதிய தலைமைச் செயலகத்தை கண்டித்து 9 மீனவ கிராமத்தினர் போராடி வருகிறார்கள்.
புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டால் 8 ஆயிரம் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
மேலும் ஏற்கெனவே நெரிசலான பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வந்தால் மேலும் நெரிசல் ஏற்படும் என்ற வாதங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன.
மீனவர்கள் எதிர்ப்பு
மீனவ மக்கள், எதிர்க்கட்சி, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை தாண்டி கூட்டணி கட்சியினரும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் அரசு மறுபரிசீலனை செய்ய போவதாக தகவல்கள் சொல்லப்படுகின்றன. யாருக்குமே எந்த பிரச்சினையும் இல்லாமல் யார் நிலங்களையும் கையகப்படுத்தாமல் அரசு நிலத்திலேயே தலைமைச் செயலகத்தை கட்டினால் என்ன என்ற முடிவுக்கு தவெக அரசு வந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஸ்ரீநித்ய கல்யாண பெருமாள் கோயில்
இதற்காக கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தையில் ஸ்ரீ நித்ய கல்யாணபெருமாள் கோயில் அருகே உள்ள அரசு நிலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதால் பொதுமக்களுக்கு பாதகம் இல்லை என்கிறார்கள்.
ஜெயலலிதா விரும்பிய இடம்
இந்த திருவிடந்தை, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னைக்கு வெளியே சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய நிர்வாக நகரத்தை அமைக்க பரிசீலனை செய்தார். அங்கு கணிசமான அளவுக்கு அரசு நிலங்கள் இருக்கின்றன. எனவே தற்போது இந்த இடம் பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள். எனினும் இது குறித்து அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பட்டினப்பாக்கம் விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள திருவிடந்தையில் அமைக்கலாம் என விஜய் முடிவு செய்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
என்னென்ன நன்மைகள்?
திருவிடந்தை- தையூர் பகுதிகளில் அரசு சொந்தமான 1000 ஏக்கர் வரை அரசு நிலங்கள் உள்ளன. சென்னையின் மைய பகுதியில் தலைமைச் செயலகம் அமைத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் பாதுகாப்புக்கான கட்டுப்பாடுகளும் தவிர்க்கலாம்.
வாழ்வாதாரம் பாதிக்காது
திருவிடந்தையில் யாருடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது. தலைமைச் செயலகம் மட்டும் இல்லாமல் அரசு அதிகாரிகளுக்கான குடியிருப்புகள், ஹெலிபேட், பார்வையாளர்கள் தங்குமிடங்கள் உள்ளிட்டவைகளையுமந் ஒரே இடத்தில் அமைக்கலாம்.
இசிஆரில் புதிய நிர்வாகம் அமைப்பது என்பது உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் ஏதுவாக இருக்கும். எனவே இந்த இடம் தேர்வு செய்யப்படலாம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
