இந்தியர்கள் மீது கை வைக்கல.. இருந்தாலும்.. வங்கதேசத்தில் என்ன நடக்கிறது? தமிழக மாணவர்கள் திக் திக்
சென்னை: வங்கதேசத்தில் வன்முறை ஏற்பட்ட போது தமிழர்களை யாரும் அவர்கள் அடிக்கவில்லை. இந்தியர்கள் மீது அவர்கள் யாரும் கை வைக்கவில்லை. இணைய சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதால் டிக்கெட் கூட புக் பண்ண முடியவில்லை. தமிழக அரசு எங்களுக்கு உதவி செய்ததாக வங்கதேசத்தில் இருந்து சென்னை திரும்பிய மாணவர்கள் கூறினர்.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. கடந்த ஜூலை 5 ஆம் தேதி இந்த இட ஒதுக்கீட்டிற்கு அந்நாட்டு ஐகோர்ட் அனுமதி அளித்த நிலையில், போராட்டங்கள் ஆரம்பித்தன. இதனால் பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாகவும் வெடித்தன. இதில் சுமார் 133 பேர் உயிரிழந்தனர்.

இதனால் வங்கதேசத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் இணைய சேவை முடக்கப்பட்டது. மேலும், போராட்டக்காரர்களைக் கண்டதும் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வங்க தேசத்தில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது. இதற்கிடையே தான் அங்கே படித்துக்கொண்டிருக்கும் இந்திய கல்லூரி மாணவர்களை மீட்க அரசு முயற்சிகளை மேற்கொண்டது. தமிழக அரசும் முயற்சியினை செய்தது.
அதன்படி தற்போது, 48 மாணவர்கள் சென்னை திரும்பியுள்ளனர். மேலும் 77 மாணவர்கள் நாளை தமிழகம் வர இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில், வங்கதேசத்தில் என்ன நடக்கிறது என்று தமிழகம் திரும்பிய மாணவர்கள் சென்னையில் பதில் அளித்தனர்.

கிருஷ்ணகிரியை சேர்ந்த அஷ்விகா என்ற மாணவி கூறுகையில், "வங்கதேச எல்லையில் தான் நாங்கள் இருக்கின்றோம். நாங்கள் இருக்கும் இடம் பாதுகாப்பாக தான் இருந்தது. அந்த பகுதியில் பெரிய பாதிப்பு இல்லை. இந்த வன்முறை பற்றி அறிந்ததும் உடனே நாங்கள் விமானத்தில் டிக்கெட் இருக்கிறதா என்று செக் பண்ணினோம். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் எங்களால் டிக்கெட் புக் செய்ய முடியவில்லை.
புக் பண்ண, புக் பண்ண டிக்கெட் கேன்சல் ஆகிட்டே தான் இருந்தது. இதையடுத்து தான் நாங்கள் இந்திய எம்பன்சியிடம் கேட்டு, இப்போது இங்கு வந்துவிட்டோம். தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறினார்.
இதேபோல் மற்றொரு மாணவி கூறுகையில், "முதல்வர் ஸ்டாலினின் உதவியினால் தான் நாங்க இப்போது இங்கே வந்திருக்கிறோம். எங்களால் டிக்கெட் கூட எடுக்க முடியலை. இந்திய எம்பசி தான் எங்களுக்கு உதவினாங்க. அதன் மூலம் தமிழக அரசே டிக்கெட் எடுத்து எங்களை பத்திரமாக அழைத்து வந்தது. இண்டெர்நெட் இல்லாததால் வீட்டுக்கு கூட தொடர்புகொண்டு பேச முடியாமல் இருந்தது.

எங்களுக்கு சாப்பாடு எதுவும் கிடைக்கல. வங்கதேசத்தில் வன்முறை ஏற்பட்ட போது இணைய சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. தமிழர்களை யாரும் அவர்கள் அடிக்கவில்லை. இந்தியர்கள் மீது அவர்கள் யாரும் கை வைக்கவில்லை. இருந்தாலும் எங்களுக்கு பயமாக இருந்தது" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications