”பின்னடைவு கிடையாது” அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு..இபிஎஸ் ஆதரவாளர் கேபி முனுசாமி!
சென்னை: நீதிமன்றத்தின் தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பின்னடைவு கிடையாது என்று இபிஎஸ் ஆதரவாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

நீதிமன்றம் தீர்ப்பு
அந்தத் தீர்ப்பில் அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
அதேபோல் பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாள்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்திரவிட்டுள்ளார். மேலும், தனி கூட்டம் கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட சட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இபிஎஸ் ஆலோசனை
ஆனால் இபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்னடைவை கொடுத்துள்ளது. இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் மூத்த நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களுமான கேபி முனுசாமி, தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேபி முனுசாமி பேட்டி
இந்த நிலையில் சென்னையில் இபிஎஸ் ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கேபி முனுசாமி கூறுகையில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து முழுமையான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. தீர்ப்பின் விவரங்கள் முழுமையாக கிடைத்த பின், தலைமைக் கழகம் மூலம் பதில் அளிக்கப்படும்.
அண்மையில் நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டம், மரபு மாறாமல் முறையாக நடத்தப்பட்டுள்ளது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை முழு மனதாக ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு
ஓபிஎஸ் தரப்பில் ஒரு 100 பொதுக்குழு உறுப்பினர்களை கொண்டு நீதிமன்றம் சென்றுள்ளார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் இபிஎஸ் தரப்பிற்கு பின்னடைவு என்ற கேள்வியே எழவில்லை. காரணம், 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஎஸ்-க்கு ஆதரவாக உள்ளனர். கட்சி பொதுக்குழு உறுப்பினர்களை , அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்வு செய்கின்றனர். அப்படி தேர்வு செய்யப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் தான் அதிகாரம் படைத்தவர்கள்.

அடுத்த நடவடிக்கை
அப்படி அனைத்து அதிகாரம் படைத்த பொதுக்குழு உறுப்பினர்கள் தான் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்துள்ளனர். இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications