வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இயல்பு..சென்னையில் 16% அதிகம்..அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்தம்
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பான அளவுக்கு பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார் . சென்னையில் 16 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. சென்னையில் அக்டோபர் 1 முதல் இதுவரை 836 மி.மீ. மழை பதிவாகியுள்ளது எனவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மே மாதம் தொடங்கி அக்டோபர் வரை நீடித்தது. அதே போல வடகிழக்குப் பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கி விட்டு விட்டு பெய்து வருகிறது. குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
மாண்டஸ் புயல் கடந்த வாரம் கரையைக் கடந்த பின்னரும் பல ஊர்களில் கனமழை நீடிக்கிறது. இந்த நிலையில் அரபிக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அரபிக்கடலில் மாண்டஸ்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் , வட கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மாண்டஸ் புயல் வலுகுறைந்து அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நாளை உருவாவதால் இன்று ஒருநாள் மழை பெய்யும்.

மழை குறையும்
நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும், அடுத்து வரும் ஐந்து தினங்களுக்கு முக்கிய நிகழ்வு எதுவும் இல்லை. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது என்றார். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்ன கல்லாறு மற்றும் திருவள்ளூரில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மாண்டஸ் புயலின் மிச்சம்
மாண்டஸ் புயலின் மிச்ச பகுதி வட தமிழக உள்பகுதியில் நிலவி வருகிறது, அது தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்கிழக்கு மற்றும் அதன் ஒட்டி உள்ள மத்திய கிழக்கு அரபி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது மேற்கு திசையில் நகர்ந்து இந்திய கடல் பகுதிக்கு செல்லும் இதனால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை அடுத்து வரும் ஐந்து தினங்களுக்கு எந்த முக்கிய நிகழ்வு இல்லை என்றார்.

சென்னையில் 16% அதிக மழை
வடகிழக்கு பருவமழை பொறுத்த வரையிலும் அக்டோபர் 1 முதல் இன்று வரையிலும் வடகிழக்கு தமிழகத்தில் மொத்தமாக 401 மி.மீ மழை பதிவாகியுள்ளது இது இயல்பான அளவுதான். அதேபோல, சென்னையில் 756 மி.மீ மழை பதிவாகியுள்ளது, இயல்பான மழையின் அளவு 736 மி.மீட்டர். இயல்பை விட 16 சதவிகிதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளது. சென்னையில் அக்டோபரில் இருந்து இந்த மாதம் 9 ஆம் தேதி முன்பு வரை இயல்பை விட 1% குறைவாக இருந்தது.

புயலுக்கு பின் அதிக மழை
காஞ்சிபுரத்தில் ஒன்பதாம் தேதிக்கு முன்பு 4 சதவீதம் குறைவாக இருந்தது தற்போது 35 சதவிகிதம் இயல்பு விட அதிகமாக உள்ளது. ராணிப்பேட்டையில் புயலுக்கு முன்பு வரையிலும் 19% குறைவாக இருந்தது, இப்போது 10 சதவிகிதம் அதிகமாக உள்ளது. திருவள்ளூரில் புயலுக்கு முன்பு வரையில் 9 சதவிகிதம் குறைவாக இருந்தது தற்போது 16 சதவீதம் அதிகமாக இருக்கிறது.வேலூரில் புயலுக்கு முன்பு வரையிலும் 34 சதவிகிதம் குறைவாக இருந்தது தற்பொழுது 17 சதவிகிதம் அதிகமாக உள்ளது என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications