ஓபிஎஸ் வலையில் தென் மாவட்ட நிர்வாகிகள்.. அடுத்தது யார்? அதிர்ச்சியில் மாஜி அமைச்சர் உதயகுமார்!
சென்னை: தென் மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களை இழுக்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளரான ஆர்.பி.உதயகுமார் முகாம் கலங்கி போயுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. மூன்று மாதங்களாக ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பில் உட்கட்சி மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் ரத்தத்தின் ரத்தங்களான அதிமுகவினர், எந்தப் பக்கம் சென்று யாரை ஆதரிக்கலாம் என்று தெரியாமல் செயல்பட்டு வருகின்றனர்.
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முன் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து கப்சிப் என்று மாறியுள்ளது. இதனால் தங்கள் தரப்பை வலுவாக்கும் முயற்சியில் ஓபிஎஸ் தரப்பு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

ஓபிஎஸ் தரப்பு தீவிரம்
இந்த நிலையில் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் அதிமுக நிர்வாகிகளில் இபிஎஸ் தரப்பில் ஆதரவாளர்களாக உள்ள பலருக்கும் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து வலைவிரித்து வருகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், சையது கான், வெல்லமண்டி நடராஜன் ஆகிய பலரோடு பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் சந்திப்பு
இதுமட்டுமல்லாமல் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சில முன்னாள் அமைச்சர்களும் ஓபிஎஸ்-ஐ வந்து சந்தித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில முக்கியப் பிரமுகர்கள் சந்தித்தார்களாம். இந்த நிலையில் ஓபிஎஸ் அணிக்கு வலுசேர்க்கும் வகையில் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் நடவடிக்கை அமைந்துள்ளது. இது இபிஎஸ் அணிக்கு மட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஆர்.பி.உதயகுமாருக்கு பின்னடைவு
மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக உள்ளார். ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கினால், முக்குலத்தோர் சமுதாய ஆதரவு பாதிக்கக் கூடாது என்பதற்காக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி அர்.பி.உதயகுமாருக்கு வழங்கினார். இதுமட்டுமல்லாமல் தென் மாவட்ட அதிமுகவை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

கவலையில் ஆர்.பி.உதயகுமார்
இதற்கு ஏற்றாற்போல் தேனியில் ஆர்ப்பாட்டம், கோவில்பட்டியில் பொதுக்கூட்டம் என்று ஆர்.பி.உதயகுமார் செயல்பட்டு வந்தார். ஆனால் அவரது ஆதரவாளராக இருந்த அதிமுக எம்எல்ஏ ஐயப்பன், ஓபிஎஸ் பக்கம் சென்றிருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மேலும் பலர் வருவார்கள் என்று எம்எல்ஏ ஐயப்பன் கூறியிருக்கிறார். அதனை உண்மையாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் ஓபிஎஸ் தரப்பு அடுத்த சில நிர்வாகிகளை இழுப்பதற்கு முன், ஆர்.பி.உதயகுமார் முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேசி வருகிறாராம்.












Click it and Unblock the Notifications