அன்னிக்கு காலை 5.30 மணி இருக்கும்! சரியாக ‘சிக்னல்’ கிடைக்கல..மோடி குறித்து ஓபிஎஸ் மகன் போட்ட பதிவு!
சென்னை : தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறிவரும் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான ஜெயப்பிரதீப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் டெல்லி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
அதே நேரத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் கட்சி தற்போது எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதோடு அவர் விடுத்த அறிவிப்புகளும் செல்லத்தக்கதாகி விட்டது.

ஓ.பன்னீர்செல்வம்
அதிமுகவைப் பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் முழுதுமாக ஓரம் கட்டப்பட்டுள்ள நிலையில், ஒரு சில முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆதரவு மட்டுமே இருக்கும் நிலையில், அடுத்ததாக என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி நிற்கிறது. அவருக்காக அவரது மகன் ரவீந்திரநாத் டெல்லி மேலிடத்தை தொடர்பு கொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்கு முன்னர் பலன் கிடைத்த நிலையில் தற்போது சற்று பின்னடைவு என்றே கூறலாம்.

ஜெயபிரதீப்
அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ்-ன் மகனான ரவீந்திரநாத் குமார் எம்பியாகவும் கட்சியிலும் சில பதவிகளை வகித்ததால் சற்று பிரபலமான முகமாக இருக்கிறார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு மகனான ஜெயப்பிரதீப் ஆன்மிக ஈடுபாடு கொண்டவர். கட்சியில் பெரிய அளவில் பொறுப்பு இல்லை என்றாலும் அவ்வப்போது கட்சி விவகாரங்கள் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிடுவது வழக்கம்.

பிரம்மாண்டம்
கடந்த அதிமுக பொது குழு உள்ளிட்ட விவகாரங்களில் சென்னைக்கு மிகப்பெரிய அளவில் ஆட்களை திரட்டி வந்தது தென் மாவட்டங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் செல்லும் போதெல்லாம் பிரம்மாண்டம் காட்டுவது என திரை மறைவில் தனது தந்தைக்கான ஆதரவை பெருக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறார். சகோதரர் ரவீந்திரநாத் போலவே பாஜக ஆதரவு சற்று தூக்கலாகவே ஜெயப்பிரதிப்பிடம் இருக்கும் இந்த நிலையில் ஜெயப்பிரதீப் பிரதமர் நரேந்திர மோடி குறித்த வெளியிட்டுள்ள ஒரு முகநூல் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி
காரணம் நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஜெய பிரதீப் முகநூல் பதிவு ஒன்றை பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு இருந்தார். அதில்"நேற்று வெளியூரில் இருந்ததாலும் சரியாக சிக்னல் கிடைக்காததால் மாண்புமிகு பாரத பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு பிறந்தநாள் பதிவுகளை பதிவிட முடியவில்லை ஆகையால் இன்று மாண்புமிகு மோடிஜி அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

என்ன காரணம்?
சிக்னல் கிடைக்காத அளவுக்கு ஜெயபிரதீப் எங்கு சென்றார் என ஒரு தரப்பும், வேண்டுமென்றே ஜெயபிரதீப் தாமதமாக வாழ்த்து சென்னாரா என மற்றொரு தரப்பும் பேசி வருகின்றனர். அதே நேரத்தில் தாமதமாக இருந்தாலும் வாழ்த்துகள் சொல்லியிருக்கிறாரே என அவரது ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர். வாழ்த்து சொல்வதோடு இல்லாமல் 'சிக்னல் கிடைக்காததால்' என்பதற்கு எதும் உள்குத்து இருக்கிறதா எனவும் பேசிக் கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications