கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்குள் வராமல் எஸ்கேப்.. 15 ஆம்னி பஸ்களுக்கு தலா ரூ.10,000 அபராதம்!
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்லாமல் சென்ற ஆம்னி பேருந்துகளை மடக்கிப் பிடித்து 15 தனியார் பேருந்துகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஏராளமான பேருந்துகளால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சென்னையை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் இறுதியில் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் பிறகு படிப்படியாக அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க அனுமதி தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய வசதி இல்லை என்றும் கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் வரும் வரை நகருக்குள் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதனை தமிழக அரசு ஏற்க மறுத்தது. இதையடுத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு ஆகிய பகுதிகளில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் வரும் வழியிலேயே பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் உள்ளே செல்லாமல் ஜிஎஸ்டி சாலை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்கின்றன. இதனால் ஆம்னி பேருந்துகளுக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து போக்குவரத்து துறை ஆணையரின் உத்தரவின் பேரில், சென்னை தெற்கு பகுதியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவல் துறையினருடன் இணைந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்லாமல் செல்லும் ஆம்னி பேருந்துகளை மடக்கிப் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு உள்ளே செல்லாமல் ஜிஎஸ்டி சாலை வழியாக சென்ற 15 தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த சோதனையில், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், தாம்பரம், குன்றத்தூர், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம், கே.கே நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர்களும், கிளாம்பாக்கம் போக்குவரத்து காவலர்களும் ஈடுபட்டனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்குள் செல்லாமல் பயணிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவது ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications