குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ், வெங்காயம் கிலோ ரூ.35 தான்! எந்தெந்த ரேஷன் கடைகளில் கிடைக்கும்
சென்னை: தமிழகத்தில் உள்ள நகர்ப்புற ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. வெங்காயம் விலை ஏறிக்கொண்டே போகும் நிலையில், இல்லத்தரசிகளும் விழிபிதுங்கி வரும் சூழலில், மொத்தம் 8,914 கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் இந்த விற்பனை நடக்கிறது. உங்க ஊரில் எந்தக் கடைகளில் வெங்காயம் கிடைக்கும் தெரியுமா? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
வெங்காயத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் வரத்து குறைந்ததுதான்... வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நிலவும் வறட்சி என பல காரணங்களால் மார்க்கெட்டுக்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்துள்ளது. பக்கத்து மாநிலங்களில் பெய்த கனமழையும் தமிழகத்துக்கு வரும் வெங்காயத்தின் வரத்தைப் பாதித்துள்ளது..

ரேஷன் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம்
இதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 3 கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இப்போது அதன் விலை ரூ.60 முதல் ரூ.75 வரை எகிறிவிட்டது. வெளி மார்க்கெட்டில் விலை அதிகமாகி விட்டதால், வெங்காயம் வாங்கவே குடும்பங்கள் கூடுதல் பணம் செலவழிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த சுமையை குறைக்க. தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் 3-ம் தேதி முதல் கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
செம வரவேற்பு
முதல் கட்டமாக NAFED நிறுவனம் மூலம் 910 மெட்ரிக் டன், NCCF நிறுவனம் மூலம் 65 மெட்ரிக் டன் வெங்காயத்தை தமிழக அரசு வாங்கியிருந்தது.. பிறகு 2-ம் கட்டமாக இந்த 2 நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 1,874 மெட்ரிக் டன் வெங்காயம் வாங்கப்பட்டது..
இப்போது 3-ம் கட்டமாக NCCF நிறுவனத்திடமிருந்து 700 மெட்ரிக் டன் வெங்காயத்தை அரசு வாங்கியுள்ளது. ரேஷன் கடைகளில் வெங்காயத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாங்கப்பட்ட வெங்காயம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் வருகிறது..
எந்தெந்த கடைகளில் கிடைக்கும்?
கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 8914 நகர்ப்புற ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் இந்த விற்பனை நடைபெறுகிறது. ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35-க்கு வாங்கிக்கொள்ளலாம். சென்னையில் அக்டோபர் 10-ம் தேதி விற்பனை தொடங்கியது.
அதைத் தொடர்ந்து, நேற்று அதாவது அக்டோபர் 11-ம் தேதி முதல் மற்ற மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளிலும் விற்பனை தொடங்கியுள்ளது.
நம்பர் நோட் பண்ணுங்க
வெங்காயம் வாங்குவதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலோ, விற்பனை தொடர்பாகப் புகார் தெரிவிக்க வேண்டியிருந்தாலோ 96005 61969 என்ற வாட்ஸ்அப் நம்பர் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்தாலும், ரேஷன் கடைகளில் ரூ.35-க்கு கிடைக்கும் இந்த வசதி ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் சமையல் செலவைக் குறைக்க உதவும். ஆனால், இந்த விற்பனை நகர்ப்புற ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் வழியாக நடைபெறுவதால், உங்கள் பகுதியில் உள்ள கடையில் இருப்பு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு செல்வது நல்லது...!!


Click it and Unblock the Notifications
