அமித்ஷாவின் ஆபரேஷன் D.. புதிய நடிகரை வைத்து குழப்பம் ஏற்படுத்த முயற்சி! தனுஷை சாடிய மாணிக்கம் தாகூர்
சென்னை: புதிய நடிகரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். தனுஷின் அரசியல் வருகைக்கு பெயர் ஆபரேஷன் D என்றும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டும் அதிமுகவின் இடத்தை பிடிக்க பல ஆண்டுகளாக முயற்சிப்பதாக விமர்சித்துள்ளார்.
நடிகர் தனுஷ் இன்னும் சற்று நேரத்தில் ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் தனது நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். சுமார் 3 ஆயிரம் மகளிரணி நிர்வாகிகளை சந்திக்கும் நடிகர் தனுஷ், அவர்களுக்கு பொறுப்பு கொடுத்து நற்பணி இயக்க பணிகளை முடுக்கிவிட இருக்கிறார். ஏற்கனவே நடிகர் தனுஷ் டெல்லிக்கு சென்று 2 நாட்கள் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து இருக்கிறார்.

இதன்பின் தனுஷின் அரசியல் வருகை சூடுபிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிகாரப்பூர்வமாக அரசியலுக்கு வருவதாக தனுஷ் அறிவிக்கும் முன்பே, தவெக அமைச்சர்கள் தொடர்ச்சியாக அட்டாக் செய்ய தொடங்கிவிட்டனர். தவெக மட்டுமல்லாமல் தவெக கூட்டணியில் இருக்கும் கட்சியினரும் தனுஷை விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக சார்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரனை மக்கள் நிராகரித்துவிட்டார்கள். தற்போது பாஜகவின் பி மற்றும் சி பிளான் ஆபரேஷன் தொடங்கி இருக்கிறது. பி பிளான் என்னவென்றால், அது அண்ணாமலை தான். அண்ணாமலைக்கு ஒரு முகமூடி கொடுத்து என்ஜிஓ அமைப்பை தொடங்கி இருக்கிறார்கள்.
அண்ணாமலை தொடர்ச்சியாக பாஜகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். அதேபோல் சி பிளான் என்னவென்றால், ஒரு நடிகரை கொண்டு வருகிறார்கள். இன்று ஒரு நடிகர் ரசிகர்களை சந்திக்கிறார். புதிய நடிகரை வைத்து தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது. இதற்கான ரிமோட் கண்ட்ரோல் டெல்லியில் இருக்கிறது. டெல்லியில் அமித்ஷாவால் தொடங்கப்பட்டது தான் இந்த ஆபரேஷன்.
இதன் பெயர் ஆபரேஷன் D. இங்கு எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம். ஏனென்றால் அதிமுக சினிமா சார்ந்த கட்சி. அதிமுகவின் டிஎன்ஏவில் சினிமா கலந்துள்ளது. அந்த அதிமுக வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்று பாஜக பல ஆண்டுகளாக முயற்சிக்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் தரப்பு அதிமுக இடத்தை பிடிக்க முயற்சிக்கிறார்கள். ரஜினியை கட்சி ஆரம்பிக்க வைத்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அவர் தொடங்கவில்லை என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
