ஒன்று சேரும் புரட்சிபயணமும் தர்மயுத்தமும்? ‘அங்கே’ ஒரு கண்ணு இருக்கட்டும்.. அலர்ட் செய்த எடப்பாடி.!
சென்னை : அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் தான் வீசிய அஸ்திரங்கள் அனைத்தும் கை கொடுக்காத நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் புரட்சி பயணம் மேற்கொண்டு வரும் சசிகலாவுடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் தரப்பு முடிவு எடுத்து இருப்பதாகவும், இதற்கு அவர் அணியில் இருந்து ஒரு முக்கிய நிர்வாகி முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவின் இரண்டாவது பொதுக் குழு கூட்டம் நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில் அதிமுகவின் ஒற்றை தலைமையாக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது தனக்குண்டான அதிகாரங்களை பயன்படுத்தி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கியதோடு, தனது ஆதரவாளர்கள் மற்றும் நெருக்கமானவர்களை கட்சியின் உயர் பதவிகளில் அமர்த்தி வருகிறார்.

சசிகலா
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுகவை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற கொள்கை முழக்கத்தோடு புரட்சி பயணம் மேற்கொண்டு வரும் சசிகலாவுடன் இணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வியூகம் வகுக்க ஓ பன்னீர்செல்வம் தரப்பு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளும் தீவிரமாகவே நடந்து வந்தன.

ஓபிஎஸ் தரப்பு
குறிப்பாக ஓபிஎஸ் தரப்புக்கும் சசிகலா தரப்புக்கும் இடையே, ஓ பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ ராஜா, பெங்களூர் புகழேந்தி, ஓபிஎஸ் இன் தீவிர ஆதரவாளரான வைத்தியலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சையில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட வைத்தியலிங்கம் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளை கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்தினார். இது அதிமுக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இடையே பெரும் பரபரப்பு கிளப்பியது. ஓ பன்னீர்செல்வத்தின் அனுதாப அரசியல் கை கொடுக்காத நிலையில் தற்போது அதிரடி காட்டத் துவங்கியுள்ளார்.

பலே திட்டம்
ஏற்கனவே வங்கி விவகாரம் கட்சி அலுவலக சாதி ஆகியவை அவருக்கு பின்னடைவாக கருதப்படும் நிலையில் இனியும் பொறுத்தால் தனக்கு அரசியல் எதிர்காலம் மங்கிவிடும் என உணர்ந்துள்ள ஓபிஎஸ் இறுதியாக சசிகலாவுடன் கைகோர்த்து எடப்பாடி பழனிச்சாமி வீழ்த்த திட்டமிட்டு வருகிறார். ஏற்கனவே கன்னியாகுமரி நிர்வாகியுடன் அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் பேசியதாக ஆடியோ விவகாரம் அதிமுக எடப்பாடி தரப்பில் ஒற்றுமை இன்மை மேலும் உறுதியாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதற்கு பிறகு அவரது முக்கிய ஆதரவாளர் பலருக்கும் கட்சி பொறுப்புகள் வழங்கப்படவில்லை.

ஆலோசனை
இதனால் அவர்களையும் ஒருங்கிணைத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வலுவான ஒரு அணியை திரட்ட ஓபிஎஸ் தரப்பு தீவிரம் காட்டி வருகிறது தற்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ள ஓபிஎஸ் விரைவில் அவரது சொந்த ஊரான தேனிக்குச் செல்ல இருக்கிறார். அங்கு அவரது பண்ணை வீட்டில் இது தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

எடப்பாடி உத்தரவு
விரைவில் அவர்கள் ஒன்று கூடி சசிகலாவை சந்திப்பது குறித்து உறுதியான முடிவெடுக்கலாம் என தேனியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஓபிஎஸ் எந்த மாதிரியான திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்த இருக்கிறார், ஓபிஎஸ்ஐ சந்திக்க இருக்கும் நிர்வாகிகள் யார் என்பது குறித்து கண்காணித்து தனக்கு தெரிவிக்க வேண்டும் என தனது தரப்பு நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications