“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்!
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தன்னைப் பார்த்து சிரித்தது பற்றி சசிகலா சொன்ன விஷயத்தைக் குறிப்பிட்டு இன்று பேசினார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலின் பேசியதைக் கேட்டு ஓபிஎஸ், குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.
சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார். அதிமுகவில் இத்தனை வருடங்கள் இருந்து மூன்று முறை தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்த ஓ.பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்தது தமிழக அரசியல் களத்தையே பரபரப்பாக்கியது. ஓ.பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்ததை திமுகவினர்களும் அதன் தோழமை கட்சிகளுடன் வரவேற்றனர்.

அதேசமயம், அதிமுகவினர் ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்தனர். ஓபிஎஸ் திமுகவில் இணைந்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு துரோகம் செய்துவிட்டார். அவர்களின் ஆன்மா ஒருபோதும் ஓ.பன்னீர் செல்வத்தை மன்னிக்காது என விமர்சித்தனர். கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது குறித்து பரபரப்பாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மதுரையில் தாய் கழகம் திரும்பும் விழா நடைபெற்று வருகிறது. ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைகின்றனர். இதனை தாய் கழகம் திரும்பும் விழாவாக ஓபிஎஸ் நடத்துகிறார். மதுரை திருமங்கலத்தில் நடைபெறும் இந்த விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.
இந்த விழா மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "இந்த மேடை மிக வித்தியாசமான மேடை. சில காலத்திற்கு முன்பு வரை சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் இந்த மேடையில் இருப்பார் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் லேட்டாக இருந்தாலும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இருந்த தாய்க் கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே திரும்பியுள்ளார். அவரை வரவேற்கிறேன்.
ஓபிஎஸ்ஸை இந்த மேடையில் பார்க்கும்போது ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. 2008ல் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது ஓபிஎஸ் சட்டமன்ற துணைத் தலைவராக இருந்தார். அப்போது இலங்கை தமிழர் விவகாரம் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் ஓபிஎஸ் பேசினார். அப்போது அந்தச் செய்தி முரசொலியில், "பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம்" எனக் குறிப்பிடப்பட்டது. கலைஞரால் பாராட்டப்பட்ட ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
ஓபிஎஸ் எப்போதுமே சிரித்த முகமாகத்தான் இருப்பார். அதுதான் அவரது பண்பு. பொதுவாக ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டால் தான் பிரச்சனை ஆகும். ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு சிரிப்பே அவருக்கு ஒரு காலத்தில் பிரச்சனை ஆனது. சட்டமன்றத்தில் ஒருமுறை அவர் என்னைப் பார்த்து சிரித்துவிட்டார். உடனே, ஸ்டாலினை பார்த்து ஓபிஎஸ் சிரித்துவிட்டார் என பிரச்சனை ஆக்கிவிட்டார்.
அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் சட்டசபையிலே ஒருவரை ஒருவர் பார்க்கும்போது சிரிப்பது தான் பண்பாடு. அப்படித்தான் அப்போது முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ்ஸுக்கு வணக்கம் சொன்னேன். அவரும் சிரித்தார். அதனையே குற்றச்சாட்டாக ஆக்கிவிட்டார்கள். ஆனால், யார் என்ன சொன்னாலும் அதே சிரித்த முகத்தோடு இருப்பவர் ஓபிஎஸ்" எனப் பேசினார்.
ஓபிஎஸ் - ஸ்டாலின் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர், சிரித்துக் கொண்டனர் என அப்போது சசிகலா பேசி இருந்தார். இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதைக் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.
தொடர்ந்து ஸ்டாலின் பேசுகையில், "ஓ பன்னீர்செல்வம் என்றால் விசுவாசம். துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி. கூவத்தூரில் சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கிவிட்டு, அவரையே யார் என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக இன்று துரோகத்தின் மொத்த அடையாளம் ஆகிவிட்டது" என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "ஜெயலலிதா கொடுத்த அரவணைப்பை முதல்வர் எனக்கு கொடுத்தார். இனி வாழ்நாள் முழுவதும் அதிமுக தோல்வியை சந்திக்க போகிறது. என் சொந்த லாபத்திற்காக இதுவரை பணியாற்றியது இல்லை. அண்ணா கண்ட திமுகவில் இணைந்ததை பெருமையாக கருதுகிறேன். இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications