கேபி முனுசாமி பாமக போகனும்..டிஜெ ஊமையாகிவிட வேண்டும்! பிரார்த்தனை செய்யப் போகும் மருது அழகுராஜ்!
சென்னை : கேபி முனுசாமி பாமக சென்றுவிட வேண்டும்.. உதயகுமார் உண்மை பேச வேண்டும் எனவும், ஜெயக்குமார் ஊமையாகிவிட வேண்டும் என பிரார்த்தனை செய்யப்போவதாக ஓபிஎஸ் ஆதரவாளரும் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ் கடுமையாகப் பேசியிருக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வதால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரை புதிதாக நியமனம் செய்துள்ளார்.
எடப்பாடி முதன் முதலில் மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டியது போலவே தற்போது ஃபார்மாலிட்டிக்காகவே ஓ.பன்னீர்செல்வமும் மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டி இருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

மா.செ. கூட்டம்
இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் கட்சியின் அவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் தாக்கல் செய்ய இருக்கிறார். இதனால் இருவருமே அதிமுகவுக்கு உரிமை கொண்டாட முடிவு செய்திருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவின்படி இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அதிமுக தரப்பில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

பண்ருட்டி ராமச்சந்திரன்
இந்த நிலையில் அறிவித்தது போலவே இன்று சென்னையில் அதிமுக ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது அதிமுகவில் தற்போது ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில் 500க்கும் மேற்பட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக மண்டபத்திற்குள் செல்ல ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்குள்ளாகவே மோதல் ஏற்பட்டது.

மருது அழகுராஜ்
இந்நிலையில் கேபி முனுசாமி பாமக சென்றுவிட வேண்டும்.. உதயகுமார் உண்மை பேச வேண்டும் எனவும், ஜெயக்குமார் ஊமையாகிவிட வேண்டும் என பிரார்த்தனை செய்யப்போவதாக ஓபிஎஸ் ஆதரவாளரும் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ் கடுமையாகப் பேசியிருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்," நாளைய கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஊமையாகிவிட வேண்டும் என அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்கள் சார்பாக நாங்கள் பிரார்த்தனை செய்வோம்.

பிரார்த்தனை
அவர் பேசுவதை நிறுத்திவிட்டாலே கட்சிக்கு நல்லது நடந்துவிடும். பாஜகவால் அதிமுகவிற்கு பின்னடைவு அல்ல. பழனிசாமியால் தான் அதிமுகவிற்கு பின்னடைவு. பழனிசாமி தன்னை திருத்திக்கொண்டு கடிதம் கொடுத்தால் அவர் அதிமுகவில் இணைக்கப்படலாம். அதற்கு முடிவு ஓபிஎஸ் எடுப்பார். நாளை கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் அதிமுக சார்பில் ஐந்து பிரார்த்தனைகள் செய்ய இருக்கிறோம். கே.பி.முனுசாமி பாமக சென்றுவிட வேண்டும். உதயகுமார் உண்மை பேச வேண்டும். ஜெயக்குமார் ஊமையாகிவிட வேண்டும். சி.வி.சண்முகம் நிதானத்திற்கு வரவேண்டும். எடப்பாடியின் பணம் வேகமாகக் கரைய வேண்டும்

பாஜக அண்ணாமலை
அண்ணாமலையின் கனிவு உண்மையாகவே ஆச்சரியமாக இருக்கிறது. அதிமுகவின் முன்னாள் சட்ட அமைச்சரே மத்தியில் ஆளக்கூடிய கட்சியை அவன் இவன் எனப் பேசுகிறார். அதற்கு உரிய பதில் சொல்லாமல் பாஜகவும் அண்ணாமலையும் நழுவுவது ஆச்சரியமாக இருக்கிறது. அண்ணாமலையிடம் இருந்து சரியான பதிலடியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார். தொடர்ந்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூர் புகழேந்தியும் எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுமையாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications