மெகா கூட்டணியா.. மெண்டல்களின் கூடாரமா? ‘சேர்க்க முடியாது’ - ஈபிஎஸ் முடிவால் கொந்தளித்த ஓபிஎஸ் அணி!
சென்னை : கட்சியையும் பிளவு படுத்திக் கொண்டு கூட்டணி கட்சிகளையும் தக்க வைக்காத நிலையில் எடப்பாடி அமைப்பது மெகா கூட்டணியாக இருக்காது அது மென்டல்களின் கூடாரமாக தான் இருக்கும் என ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் விளாசியுள்ளார்.
2024 தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளை பாஜக தலைமை தொடங்கி விட்டதாகக் கூறப்படும் நிலையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி பற்றிப் பேசினார்.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது எனத் தெரிவித்த ஈபிஎஸ், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்றார்.

மெகா கூட்டணி
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றிப் பேசியது அரசியல் அரங்கில் விவாதங்களைக் கிளப்பியது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் எனத் தெரிவித்தார் ஈபிஎஸ். மேலும், ஓபிஎஸ்ஸை துரோகி என்றும், அவரது அணியை திமுகவின் 'பி' டீம் என்றும் விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, நீக்கப்பட்டவர்கள் இனி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஓபிஎஸ் டீம்
அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், டெல்லி பாஜக தலைமையும் அதனையே விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்றும், ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியாது என்றும் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கட் அண்ட் ரைட் பேச்சால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பேச்சு குறித்து ஓபிஎஸ் தரப்பு விமர்சித்து வருகிறது.

மென்டல்களின் கூடாரம்
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தால் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மருது அழகுராஜ், எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி பற்றிய பேச்சை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஓட்டை வீட்டில் குடியேற ஒரு பயலும் வரமாட்டான். ஒன்றுபட்ட அண்ணா தி.மு.கவை மட்டுமே, பா.ஜ.க.உட்பட எந்த கட்சியும் அங்கீகாரம் செய்யும். எனவே கட்சியையும் பிளவு படுத்திக் கொண்டு கூட்டணி கட்சிகளையும் தக்க வைக்காத நிலையில் எடப்பாடி அமைப்பது மெகா கூட்டணியாக இருக்காது அது அரசியல் அறியாத மென்டல்களின் கூடாரமாக தான் இருக்கும்..

ஒன்றுபட்ட அதிமுக
அதே சமயம் இடி அமீன் எடப்பாடி இல்லாத பூத்துக் குலுங்கும் பசுமைத் தோட்டமாக அண்ணா தி.மு.க ஓ.பி.எஸ் தலைமையில் உருவாகும். பச்சிலையாம் இரட்டை இலை சின்னம் உட்பட்ட அனைத்து உரிமைகளோடு பிரிந்து ஒதுங்கி கிடக்கும் அ.தி.மு.க வின் ஒட்டுமொத்த சக்திகளும் ஒன்றாகும் நிலை உருவாகும். பதறாத பண்பாளர் ஓ.பி.எஸ் தலைமையிலான அந்த ஒன்று பட்ட அண்ணா திமுக தான் வென்று காட்டும்.. இந்த அரசியல் புரட்சியையும் அண்ணா திமுகவுக்கான அரசியல் மறுமலர்ச்சியையும் மக்கள் ஆதரவோடு கழகத்தின் உயிர் மூச்சான தொண்டர்கள் நடத்திக் காட்டுவார்கள். இது சத்தியம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications