தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார்
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.பி தனபால் ஆகியோர் ஆளுநர் அர்லேகரை இன்று சந்தித்து மனு அளித்துள்ளனர். அதிமுக எம்.எல்.ஏக்களை இழுக்க தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் முறையிட்டதாக தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களில் வென்ற அ.தி.மு.க.வில் திடீரென பிளவு ஏற்பட்டது. தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த 25 பேர் வாக்களித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த 22 பேர் எதிராக வாக்களித்தனர். கொறடா உத்தரவை மீறிய 25 பேர் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்தது.

அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பாக அதிமுகவினர் ஏற்கெனவே ஆளுநரைச் சந்தித்தும் ஒரு மனுவை அளித்திருந்தனர். தற்போது அதிமுகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.
சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் தவிர மற்ற எம்.எல்.ஏக்கள் தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, ஓரணியாக இணைந்துள்ளனர். இந்நிலையில், குதிரை பேரம் நடப்பதாக அதிமுகவினர் ஏற்கெனவே குற்றம்சாட்டி வரும் நிலையில் அதுகுறித்து ஆளுநரிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.
தவெக நடத்தும் குதிரை பேரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்படி பழனிசாமி அளித்த மனுவை ஆளுநரிடம் அளித்ததாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், "குதிரை பேரம் புகார் தொடர்பாக தவெக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம். குதிரை பேரம் தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர், தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும். அதிமுக எம்.எல்.ஏ.க்களை விலை பேசிய தவெக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். தவெகவின் குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை கோரிய மனு நிலுவையில் உள்ளது. நடவடிக்கை கோரிய மனு நிலுவையில் இருக்கும்போது எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது தவறு. தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனபால் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில், "தவெகவிற்கு தனி மெஜாரிட்டி இல்லாத சூழலில், அதிமுகவை உடைக்க நினைத்தும் முடியாத நிலையில், பதவியேற்ற உடனே ராஜிநாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னணியை ஆராய வேண்டும். மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல். ஜனநாயகத்தை காக்க மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத் துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும்" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
