கூவத்தூர் ரகசியம்.. “விசாரணை கமிஷன் அமைத்து உள்ளே தள்ளணும்!” ஒரே போடாக போட்ட மனோஜ் பாண்டியன்.. பரபர!
சென்னை : கூவத்தூரில் என்ன நடந்தது என விசாரிக்க தனி கமிஷன் அமைத்து, அனைவரையும் விசாரித்து, தவறு இழைத்தவர்கள் அனைவரையும் உள்ளே தள்ளா வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் பேசியுள்ளார்.
அதிமுகவின் ஓபிஎஸ் அணி சார்பில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் முன்னிலையில் முக்கிய நிர்வாகிகள் உரையாற்றினர்.
அப்போது பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ, அதிமுகவுக்கு பிடித்துள்ள நோய் பழனிசாமி; அதற்கான மருந்துதான் ஓ.பன்னீர்செல்வம் என தெரிவித்திருக்கிறார்.

ஓபிஎஸ் அணி மாசெக்கள்
சென்னை வேப்பேரியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்திற்கு அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமசந்திரன் தலைமை தாங்கினார். ஓபிஎஸ் அணியின் 88 மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பண்ருட்டி ராமச்சந்திரன்
இந்தக் கூட்டத்தில் தலைமையேற்றுப் பேசிய பண்ருட்டி ராமசந்திரன், எம்ஜிஆர் உருவாக்கிய மாபெரும் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கூடியுள்ளோம். ஓ.பன்னீர்செல்வத்துக்கு எம்ஜிஆர் ஆசி உண்டு, ஜெயலலிதாவின் ஆசியும் உங்களுக்கு உண்டு. அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிசாமி போன்ற இடைச் செருகல்களை அப்புறப்படுத்தி இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

நான் அன்றே சொன்னேன்
அவரைத் தொடர்ந்து பேசிய அதிமுக மனோஜ் பாண்டியன், "அரைகுறை சட்ட வல்லுனர்களை வைத்துக் கொண்டு ஓற்றைத் தலைமை என கூறி வருகின்றனர். ஒற்றைத் தலைமை வேண்டாம், சட்டச் சிக்கல் வரும் என்று அப்போதே நான் கூறினேன். ஆனால் அதையெல்லாம் கேட்காமல் அதிமுகவை இப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழலுக்கு தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை பிடித்துள்ள நோய் எடப்பாடி, அதற்கான மருந்து ஓபிஎஸ்.

நயவஞ்சகர்கள்
எந்த நிலையிலும் கழகத்தில் பிளவு ஏற்படக்கூடாது என 5 ஆண்டு காலம் ஒத்துழைப்பு கொடுத்தார் ஓபிஎஸ். ஆனால், அதை பயன்படுத்திக்கொண்டு இறுதியாக அவரையே விலகிவிடுங்கள் என்று சொல்லக்கூடிய நயவஞ்சகர்கள். பொதுக்குழு வழக்கு தீர்ப்பு வருவதற்கு முன்பு நம்மிடம் 15 மாவட்ட செயலாளர்கள் இருந்தார். தீர்ப்பு வந்தவுடன் ஒருவர் பின் ஒருவராகச் சென்று 5 பேர் மட்டும் தான் இருந்தார்கள். ஆனாலும், முன் வைத்த காலை பின் வைக்காமல் இறுதி வரை போராடியவர் ஓபிஎஸ்" எனப் பேசினார்.

எடப்பாடியை ஒழித்துவிட்டு
மேலும் பேசிய மனோஜ் பாண்டியன், "டெண்டர் படை தான் எடப்பாடியிடம் உள்ளது. நம்மிடம் உள்ளது தொண்டர் படை. தொண்டர் படை இருக்கும் வரை ஓபிஎஸ்ஸை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது. அதிமுகவை பாதுகாக்கக்கூடிய ஒரே தலைவர் ஓபிஎஸ் தான். ஒன்றிணைவுக்கு ஒத்துவருபவர்களை ஒன்றிணைப்போம். ஒத்துவரவில்லை என்றால் எடப்பாடியை ஒழித்துவிட்டு ஒன்றிணைவோம்.

எடப்பாடி அணியே இருக்காது
எதிர்ப்பு என்று ஆரம்பித்தால், ஓபிஎஸ் ஒரு கட்டளையிட்டால், எடப்பாடி அணி என ஒன்று அதிமுகவில் இருக்காது. 10 ஆண்டு காலம் பணம் சம்பாதித்தவர்கள் உங்களிடம் உள்ளனர். எங்களிடம் இருப்பவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் சுயநலமில்லாத பாடுபடும் தூய தொண்டர்கள்." என ஆவேசமாகப் பேசினார் மனோஜ் பாண்டியன்.

கூவத்தூர் - விசாரணை கமிஷன்
மேலும் பேசிய மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் ஆட்சிக்கு வந்ததும் கூவத்தூரில் என்ன நடந்தது என விசாரிக்க தனி கமிஷன் அமைத்து, அனைவரையும் விசாரித்து, தவறு இழைத்தவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், அதன்பிறகு அதிமுக நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் எனக் கேட்டுக்கொண்டார்.

கூவத்தூர் மர்மம்
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு கூவத்தூர் ரிசார்ட்டில், அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், பல கோடி பணம் கைமாறியதாகக் கூறப்பட்டது. அதன் மூலமே, எடப்பாடி பழனிசாமி முதல்வர் சீட்டைப் பிடித்தார் என விமர்சிக்கப்படுவது உண்டு. அதைச் சுட்டிக்காட்டியே மனோஜ் பாண்டியன் இன்று விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications