பரந்தூர் விமான நிலையம்: ஏரியை கையகப்படுத்துவதை எதிர்த்து பொதுநல வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு
சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையை ஜனவரி 5 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூரில், பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம், விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம், தேசிய பசுமை தீர்ப்பாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளன. ஆனால், அப்பகுதியில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் சுற்று வட்டார கிராம மக்கள் போராடி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த பகுதியில் 5 ஆயிரத்து 747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விமான நிலையம் அமைக்க ஏகனாபுரத்தில் உள்ள வைலேரி ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரத்தைச் சேர்ந்த ஜி.சுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பரந்தூர் விமான நிலையம் அமைக்க உள்ள 5,747 ஏக்கர் பரப்பில், 576 ஏக்கர் பரப்பு நீர்நிலைகள். இதை தமிழக அரசு ஒப்புக்கொண்ட போதும் மாற்று இடத்தை தேர்வு செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை உத்தரவின்படி, நீர்நிலைகளை, விவசாயம் சாராத பயன்பாட்டுக்காக மறுவகைப்படுத்த முடியாது எனவும், ஏரியை விவசாயம் சாராத பணிகளுக்காகவோ, வர்த்தக பயன்பாட்டுக்காகவோ வகை மாற்றம் செய்யக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஏரியில் விமான நிலையம் அமைக்க அனுமதி வழங்கிய தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, விசாரணையை வரும் ஜனவரி 5 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications